பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி நாடாளுமன்ற பதவியை இழந்துள்ளார் ஒரு மக்கள் பிரதிநிதி என்னென்ன காரணங்களுக்காக பதவி இழப்பை சந்திப்பார்கள் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி முன்னாள் உள்ள சட்ட வாய்ப்புகள் என்ன உள்ளிட்டவற்றை விரிவாக காணலாம்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் அந்தந்த தொகுதிகளுக்கான இடங்கள் என்பது தேர்தல் மூலமாக மற்றும் நியமனங்கள் மூலமாக நிரப்பப்படுகின்றது.
இந்திய அரசியலமைப்பின் கீழ் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பெற்றால் அவர்களுடைய பதவி பறிபோகும்.
அதுவும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் மதம், இனம், வாழ்விடம், மொழி உள்ளிட்டவற்றை கொண்டு சமூகத்தில் பிளவை ஏற்படுத்துதல், சகோதரத்துவத்திற்கு பங்கம் ஏற்படுத்துதல், லஞ்ச குற்றச்சாட்டு, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், சமுதாயத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் நடந்து கொள்வது, தீண்டாமையை கடைப்பிடிப்பது, தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வது, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது, போதைப் பொருட்களை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒரு உறுப்பினர் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக சிறை தண்டனை பெற்றால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
2013ம் ஆண்டுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் யாரேனும் ஒருவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (4) ன் கீழ் வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும். மேலும், இடைப்பட்ட மூன்று மாத கால அவகாசத்திற்குள் அவர்களுடைய பதவி பறிக்கப்படாது எனும் நிலை இருந்தது. மூன்று மாதங்களுக்குள் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியும். ஆனால் 2013ம் ஆண்டில் மிகவும் பிரபலமான லில்லி தாமஸ் வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்ததால் தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே மக்கள் பிரதிநிதி பொறுப்பை இழக்க வேண்டிய சூழல் 2013ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டது.
இருப்பினும் குற்றவியல் நடைமுறை சட்டம் கீழ் தண்டனையை எதிர்த்து தண்டனை பெற்ற பிரதிநிதி மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு வழக்கு முடியும் வரை தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இடைக்கால தடை சட்டத்தினால் பறிக்கப்பட்ட பதவி மீண்டும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இழந்த பதவியை மீண்டும் பெறவேண்டும் என்றால் சட்ட ரீதியில் போரிட்டு வழக்கில் முழுமையாக விடுதலை பெறுவதே ஒரே வழி எனவும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM