சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டாலும், ராகுல் காந்தி தனது மக்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவது சுலபமல்ல எனவும், அதற்கு அதிக அவகாசம் தேவைப்படும் எனவும் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முதல்கட்டமாக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, தான் குற்றவாளி என சூரத் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு மற்றும் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இரண்டு வருட சிறைத்தண்டனை ஆகிய இரண்டுக்கும் தடை பெற வேண்டும். அப்போது, எதிர்தரப்பு ராகுல் காந்தியின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதற்கும், மேலும் தீர்ப்பு அவருக்குச் சாதகமாக இருந்தால் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
தற்போது ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை ஒரு மாதத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் காந்தி குற்றவாளி என்கிற சூரத் நீதிமன்ற உத்தரவு அல்லது அவருக்கு விதிக்கப்பட்டுள்ள இரண்டு வருட சிறைத் தண்டனையோ மேல்நீதிமன்றத்தால் தடை செய்யப்படவில்லை.
ஆகவே முதல்கட்டமாக ராகுல் காந்தி தனக்கு எதிராக சூரத் நீதிமன்றம் அளித்துள்ள அவதூறு வழக்கில் குற்றவாளி என்கிற தீர்ப்பு (conviction) மற்றும் இரண்டு வருட சிறைத் தண்டனை (sentence) ஆகிய இரண்டு உத்தரவுகளுக்கும் மேல்நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும். அதன்பிறகு அந்த உத்தரவை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்து, ராகுல் காந்தி தனது மக்களவை உறுப்பினர் பதவியை திரும்பப் பெற வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் அது மிகவும் கடினம் மற்றும் அவகாசம் தேவைப்படும் நடவடிக்கை ஆகும் எனக் கூறப்படுகிறது. இதற்கு சமீபத்தில் லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து முகமது பைசல் தகுதிநிக்கம் செய்யப்பட்டது உதாரமணமாகக் காட்டப்படுகிறது. மேலும், மக்களவை உறுப்பினரை இடைநீக்கம் செய்வது மற்றும் மீண்டும் அவரைப் பதவியில் அமர்த்துவது ஆகிய நடவடிக்கைகளின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே உள்ளது.
முகமது பைசல் தனக்கு எதிராக லட்சத்தீவு பகுதியில் உள்ள கவரட்டி நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 25ஆம் தேதி தடை பெற்றார். ஆனால் இன்னமும் அவரது மக்களவை உறுப்பினர் பதவி முகமது பைசலுக்கு திரும்ப கிட்டவில்லை. பிப்ரவரி 24ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது பைசல் தனது மக்களவை உறுப்பினர் பதவியை திரும்பக்கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதுவரை சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை உறுப்பினர் பதவியை முகமது பைசலுக்கு திரும்ப அளிக்கும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சூலே, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக முகமது பைசலுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் அவர் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பு இரண்டுக்குமே உயர் நீதிமன்றம் தடை விதித்து இரண்டு மாதம் கடந்தபோதிலும், முகமது பைசலுக்கு மக்களவை உறுப்பினர் பதவி திரும்ப கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு உள்ள அரசியல் செல்வாக்கு மற்றும் சட்ட வல்லுனர்களின் ஆதரவு உள்ளபோதிலும், இதேபோன்ற சவால்கள் ராகுல் காந்திக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமல்ல, லட்சத்தீவு தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டதால், தேர்தல் ஆணையம் அங்கே தேர்தல் நடத்த அட்டவணை அறிவித்தது.
ஆனால் கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் தடையை ரத்து செய்ய மறுத்த கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலாகவோ சிறைத் தண்டனை பெற்றால், எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தங்கள் பதவியை இழக்கிறார்கள். அரசியல் சாசனத்தின் 14 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின்கீழ் தகுதி நீக்கம் மற்றும் பதவியைத் திரும்ப அளிப்பதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சர் பி.எம்.சையத்தின் மருமகனான முஹம்மது சலெஹ் என்பவரை தாக்கியதற்காக கொலை முயற்சி வழக்கில் முகமது பைசல் மற்றும் பத்து நபர்களுக்கு கவரட்டி நீதிமன்றம் ஜனவரி 10ம் தேதி, ‘அவர்கள் அனைவரும் குற்றவாளிகள்’ என அறிவித்து தண்டனை அளித்தது. முகமது பைசலுக்கு பத்து வருட சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட சூழலில், ஜனவரி 13ஆம் தேதி அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உடனடியாக அவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், ஜனவரி 25ஆம் தேதி அவர் குற்றவாளி என்கிற கவரட்டி நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அவருக்கு விதிக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை இரண்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.
தடையை எதிர்த்து லட்சத்தீவு நிர்வாகம் மற்றும் இந்த வழக்கில் புகார் அளித்தவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். பிப்ரவரி 20ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தடை உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது. அதன்பிறகு முகமது பைசல் மற்றும் சுப்ரியா சூலே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதங்கள் இன்னும் நிலுவையிலே உள்ளன என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தகைய உதாரணத்தைப் பார்க்கும்போது ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் திரும்பப் பெறுவது கடினம் எனவும் அதற்கு அவகாசம் தேவைப்படும் எனவும் கருதப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் அடுத்த வாரம் முடிவுக்கு வர உள்ள நிலையில், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரான மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் ராகுல் காந்தி தனது மக்களவை உறுப்பினர் பதவியை திரும்பப் பெறுவாரா என்பதுதான் காங்கிரஸ் தலைவர்களின் தற்போதைய கேள்வியாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM