புதுடெல்லி: பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று (மார்ச் 23) தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ராகுல் காந்தி இன்று (மார்ச்.24) எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து போட்டியிட்டு எம்.பி.யானார். இந்நிலையில், ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மட்டுமின்றி தேசிய, மாநிலக் கட்சிகள் பலவும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. தமிழகத்தில் கூட்டணிக் கட்சியான திமுகவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
யுத்தம் தொடர்கிறது… – காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தைப் பாதுகாக்க ராகுல் காந்தி தொடர்ந்து போராடுவார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை எடுப்பார்” என்று பதிவிட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தியின் புகைப்படம் பகிரப்பட்டு அதற்கு ‘யுத்தம் தொடர்கிறது’ என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.
ஜெய்ராம் ரமேஷ்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதை நாங்கள் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்திருக்கின்றனர். இந்திய ஜனநாயகம் சாந்தியடையட்டும்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
சசி தரூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கையில் காட்டப்பட்ட துரிதம் என்னை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வந்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது அதிகாரத்திற்கு போட்டிபோடும் அரசியல். ஜனநாயகத்திற்கு இத்தகைய அரசியல் மிகவும் கேடானது” என்று பதிவிட்டுள்ளார்.
அசோக் கெலாட்: “மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்திருப்பது சர்வாதிகாரத்தனம். இதேபோன்றதொரு அணுகுமுறையைத் தான் இந்திரா காந்தியிடமும் பாஜககாட்டியது. பின்னர் விளைவுகளை சந்தித்தது. ராகுல் காந்தி இந்த தேசத்தின் குரல். அந்தக் குரல் இனி இன்னமும் ஓங்கி ஒலிக்கும். இங்கே நிலவும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஓங்கி ஒலிக்கும்” என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.
மம்தா பானர்ஜி: திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தான் முதன்மையான இலக்குகளாகியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.
உத்தவ் தாக்கரே: “திருடரை திருடர் என்றழைப்பது நம் நாட்டில் கிரிமினல் குற்றமாக இருக்கிறது. ஆனால், உண்மையான திருடர்களும், கொள்ளையர்களும் இன்னும் சுதந்திரமாகத் தான் இருக்கின்றனர். ராகுல் காந்தி தான் தண்டிக்கப்பட்டுள்ளார். இது ஜனநாயகத்தின் மீதான நேரடி படுகொலை. இங்கே அனைத்து அரசு இயந்திரங்களும் அழுத்தத்தில் இருக்கின்றன. இதுதான் சர்வாதிகாரத்தின் முடிவுக்கான தொடக்கம். இந்த யுத்தத்திற்கு ஒரு சரியான திசை மட்டும் கொடுக்கப்பட வேண்டும்” என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சித் தலைவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சுரப் பரத்வாஜ் (ஆம் ஆத்மி): “எங்களுக்கும் காங்கிரஸுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. மத்திய அரசு எங்களை தாக்கியபோது காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கைத்தட்டியும்கூட உள்ளனர். எதிர்க்கட்சிகளின் குரலை மத்திய அரசு ஒடுக்கினால் யார்தான் மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவது? சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காக எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர். இதுவே தொடர்ந்தால் பிரதமர் மோடியும், பாஜகவினரும் மட்டுமே தான் எல்லா தேர்தலிலும் போட்டியிட வேண்டியிருக்கும். இது சர்வாதிகாரம்” என்று ஆம் ஆத்மி டெல்லி அமைச்சர் சுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
ஆர்ஜேடி கண்டனம்: “இது வெட்கக்கேடானது மட்டும் துரதிர்ஷ்டவசமானது. இதைவிட நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி இருக்க முடியாது” என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி எம்.பி. மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து ட்விட்டரில் இந்திய அளவில் #RahulGandhi நம்பர் 1 இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் #ISupportRahulGandhi என்ற ஹேஷ்டேகும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.