100 % இந்தி மொழி விவகாரம்: சுற்றறிக்கையை திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

மத்திய அரசு அலுவலகங்களில் நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் செய்வது தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.
தனது கோரிக்கையில் அவர், “தென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்கக் குழு கூட்ட சுற்றறிக்கையில் உடல் நலம் பற்றிய வழிகாட்டி நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அக்கூட்டத்தில் 100 சதவீத இந்தி மொழி அமலாக்கம் தொடர்பான பயிற்சி தரப்பட்டதாக அந்த சுற்றறிக்கை கூறுகிறது. உடல் நலம் போன்றே தேச நலம் கருத்தில் கொண்டு அங்கு அலுவல் மொழி விதிகளை விவரித்து இருக்கலாம். அலுவல் மொழி அமலாக்கக் குழு, அந்த விதிகளை வாசிக்க வேண்டும். ‘100 சதவீத இந்தி’ என்று அலுவல் மொழி விதிகளே கூறவில்லை. ஆகவே தான் அது மாநிலங்களை நான்காக பிரித்துள்ளது.
எங்கு இந்தி கட்டாயம், எங்கு தெரிவு, எங்கு கட்டாயமில்லை, எங்கு அலுவல் மொழிகளே பொருந்தாது என்று தென்னக ரயில்வே அலுவல் மொழி ஆய்வுக் குழு அறிந்திருக்க வேண்டும். இதில் நான்காவது வகையில் தமிழ்நாடு வருகிறது. அதாவது தமிழ்நாட்டுக்கு அலுவல் மொழி விதிகளில் இருந்து 100 சதவீதம் விதி விலக்கு தரப்பட்டுள்ளது. விதிகளில் உள்ள இந்த 100 சதவீதத்தை விட்டு விட்டு உங்கள் மனதில் உள்ள ஆசைகளை எல்லாம் 100 சதவீதம் நிறைவேற்ற முயற்சிக்க கூடாது. மொழி பன்மைத்துவமே தேசத்தின் ‘உடல் நலத்திற்கு’ உகந்தது.
image
தென்னக ரயில்வே தமிழில் செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது. ‘தேஜஸ்’ என்று பெயர் சூட்டுவதை விட அழகான தமிழில் ஆயிரம் பெயர்கள் உள்ளன. தமிழ் மக்களுக்கான சேவைக்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. ஆகவே உடல் நலத்திற்கு எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று வழிகாட்டல் கூட்டத்தில் தரப்பட்டுள்ளது போல அலுவல் மொழி விதிகள் ‘எதை செய்ய சொல்லி இருக்கிறது? எதை செய்யக் கூடாது?’ என்பதையும் தென்னக ரயில்வே பயில்வது நல்லது.

நூறு சதவீத இந்தி மொழி அமலாக்கம் தொடர்பாக தென்னக இரயில்வேயில் சுற்றறிக்கை.

அலுவல்மொழி விதிகளில் இருந்து விலக்குப்பெற்ற
மாநிலம் தமிழ்நாடு.

எனவே இந்த சுற்றறிக்கை அப்பட்டமான விதிமீறல்.

அலுவல்மொழி ஆய்வுக்குழுவின் சுற்றறிக்கையை@GMSRailway உடனடியாக திரும்பப்பெறுக. pic.twitter.com/gNeiZqEPyK
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 24, 2023

தென்னக ரயில்வே பொது மேலாளர் உரிய முறையில் அலுவல் மொழி ஆய்வுக் குழுவை அறிவுறுத்த வேண்டும். அதன் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.