பிரதமர் குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு, சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 102 (1) e-ன் படி, இரண்டாண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
அதன்படி, வயநாடு தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்தி, தீர்ப்பு வெளியான நேற்றைய தேதியிலிருந்து எம்பி பதவியில் இருந்து உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தியின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்யாவிடில், அடுத்த 8 ஆண்டுகளுக்கு, அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.