அஜித் குமாரின் தந்தை பி. சுப்பிரமணியம் சென்னையில் வசித்து வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார்.
பி. சுப்ரமணியம் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அஜித்தும், அப்பாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். அப்பா சுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பாவின் இழப்பு பேரிழப்பு தான். அதை தாங்கிக் கொள்ளும் சக்தியை அஜித் குமாருக்கு இறைவன் தான் கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் தைரியமாக இருக்க வேண்டும் ஏ.கே. உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். ஏதாவது என்றால் ஒரு வார்த்தை சொன்னால் போதும். வந்துவிடுவோம்.
அப்பா இறந்துவிட்டார் என்கிற செய்தியை கேட்டு எங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக அப்பா கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அஜித் ரசிகர்கள் மட்டும் அல்லாது விஜய் ரசிகர்களும் அஜித் குமாருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அஜித் சார் அப்பாவின் ஆத்மா சாந்தியடையட்டும். அஜித் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்கிறார்கள்.
அஜித் தற்போது ஊரில் இல்லை. மனைவி ஷாலினி, மகன் ஆத்விக், மகள் அனௌஷ்காவுடன் வெகேஷனுக்காக வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். அவர் விரைவில் சென்னைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் மின்மயானத்தில் பி. சுப்பிரமணியத்தின் உடல் இன்று காலை 10 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.
அஜித் துபாய்க்கு சென்றிருந்தார். அங்கு அவர் சந்தோஷமாக சிரித்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதற்குள் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டதே. அஜித் வேறு ஊரில் இல்லையே என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கெரியரை பொறுத்தவரை ஏ.கே. 62 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித் குமார். அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவரை நீக்கிவிட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அதனால் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இதையடுத்தே குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு கிளம்பினார் அஜித் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.