நவீன் பட்நாயக்கை சந்தித்தார் மம்தா பானர்ஜி!
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக ஒடிசா மாநிலம் சென்றிருக்கிறார். ஒடிசா மாநிலத்தில் தங்கியுள்ள அவர் ஜாகன்நாதர் கோயிலுக்கு சென்றும் வழிபட்டார். தொடர்ந்து பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்ட அவர், நேற்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. சுமார் 15 நிமிடம் நீடித்த ஆலோசனைக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, `இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு. நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய எதுவும் பேசவில்லை. கூட்டாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவது பற்றி மட்டுமே விவாதித்தோம்’ என தெரிவித்தனர். மம்தா பானர்ஜி பேசுகையில் `நவீன் பட்நாயக் உயர்ந்த தலைவர். கூட்டாட்சி முறை பற்றிய அவரின் கருத்தை ஆதரிக்கிறேன். மூன்றாவது அணி குறித்து எதுவும் பேசவில்லை’ என்றார்