மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் யாரேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு ஆளானால், பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர். அதோடு, அவர்கள் 6 ஆண்டுகள் தேர்தல்களிலும் போட்டியிட முடியாது.
அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அவதூறு வழக்கு ஒன்றில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால், எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இவரைப் போல் இதற்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை பின்வருவன பார்ப்போம்.
ஜெயலலிதா (அ.தி.மு.க) : சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, 2014, செப்டம்பரில் தமிழ்நாடு சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது தனது முதல்வர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
லாலு பிரசாத் யாதவ் (ஆர்.ஜே.டி) : கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, 2013, செப்டம்பரில் மக்களவை எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பிபி முகமது பைசல் (என்.சி.பி): கொலை முயற்சி வழக்கில் இந்தாண்டு ஜனவரியில், இவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கேரள உயர் நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்த பிறகும், லோக் சபா செயலகம் இன்னும் தகுதி நீக்கத்தை ரத்துசெய்து அறிக்கை வெளியிடவில்லை.
அசாம் கான் (சமாஜ்வாதி): 2019-ம் ஆண்டு வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளானதையடுத்து, உத்தரப்பிரதேச சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அனில் குமார் சாஹ்னி (ஆர்.ஜே.டி) : எம்.பி-யாக இருந்தபோது 2012-ல் விமானத்தில் செல்லாமலே ஏர் இந்தியா டிக்கெட்டுகளை வைத்து கொடுப்பனவு வாங்கி மோசடி செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால், 2022-ல் பீகார் சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
விக்ரம் சிங் சைனி (பா.ஜ.க): இவருக்கு 2013-ம் ஆண்டு முசாபர்நகர் கலவர வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், 2022, அக்டோபரில் உத்தரப்பிரதேச சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
குல்தீப் சிங் செங்கார் (பா.ஜ.க) : கற்பழிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, 2020-ல் உத்தரப்பிரதேச சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
அப்துல்லா அசாம் கான் (சமாஜ்வாதி): 15 ஆண்டுகள் பழைமையான வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், 2023, பிப்ரவரியில் உத்தரப்பிரதேச சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பிரதீப் சவுத்ரி (காங்கிரஸ்) : தாக்குதல் தொடர்பான வழக்கில், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளானதால், 2021, ஜனவரியில் ஹரியானா சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்
இந்திரா காந்தி: 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவின்பேரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டார். இதன் காரணமாகவே அப்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதாகப் பேசப்பட்டது.