தமிழக அரசு 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 20ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மீம்ஸ் போட்டு வீடியோ வெளியிட்ட சவுக்கு சங்கரின் ஆதரவு ட்விட்டர் வலைதளமான Voice of Savukku அட்மின் பிரதீப் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கர் பேட்டி
அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ’சமயம் தமிழ்’ யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்த சவுக்கு சங்கர் பல்வேறு விஷயங்களை மிகவும் காட்டமான முறையில் முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், நான் சிறைக்கு செல்வதற்கு முன்பிருந்தே பிரதீப் என்னுடன் நெருக்கமாக பழகி வந்தார். முன்னதாக பாஜகவில் இருந்தார்.
யார் இந்த பிரதீப்?
என்னுடைய எழுத்துகள், பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இருந்து வெளியேறி என்னுடன் வந்து சேர்ந்து கொண்டார். மிகவும் திறமையான இளைஞர். என்னுடன் இணைந்து சமூக வலைதளப் பணியில் ஈடுபட வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். நானும் அனுமதித்தேன். அதன்பிறகு Voice of Savukku என்ற ட்விட்டர் பக்கம் உதயமானது. இவருடன் சேர்ந்து கொண்டு 4, 5 கல்லூரி மாணவர்கள் அந்த பக்கத்தை நிர்வகித்து வருகின்றனர்.
வாட்ஸ்-அப் குழு
அவர்களுக்கு சம்பளம் எதுவும் தரவில்லை. எனக்கே வருமானம் கிடையாது. அன்பின் காரணமாக அந்த இளைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள். பின்னர் வாட்ஸ்-அப் குழு ஆரம்பித்து ட்வீட் உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். அப்போது சில அறிவுரைகள் வழங்குவேன். பெரும்பாலான விஷயங்கள் எனது கவனத்திற்கு வந்த பிறகு தான் பதிவிடப்படும்.
இன்பநிதி புகைப்படம்
ஒருசமயம் உதயநிதியின் மகன் இன்பநிதி ஒரு பெண்ணுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று வைரலானது. அதை பகிரக்கூடாது. இதுபோன்று பொது வாழ்வில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிர்வது, விமர்சிப்பது கூடாது என அறிவுறுத்தினேன். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தொடர்பான கவுண்டமணி, செந்தில் காமெடி வீடியோ என்னுடைய கவனத்திற்கு வந்த பிறகு தான் போடப்பட்டது.
கவுண்டமணி – செந்தில் காமெடி
இந்த மீம்ஸை நாங்கள் உருவாக்கவில்லை. சமூக வலைதளங்களில் வந்ததை எடுத்து பகிர்ந்தோம். இதுதான் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. என்னை கைது செய்ய திராணியில்லாத அரசு அந்த இளைஞனை கைது செய்துள்ளது. இதனால் அவரது வாழ்வை சீரழித்து விட்டேன் என்று எப்படி சொல்ல முடியும். அந்த இளைஞன் நாளை மிகப்பெரிய தலைவனாக வருவதற்கு வாய்ப்புள்ளது.
சட்ட ரீதியிலான விஷயங்கள்
என்னை சிறை தான் செதுக்கியது. அவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மேலும் அவரது சட்ட ரீதியிலான விஷயங்களை எல்லாம் நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். அரசியல் விமர்சனங்கள் என்றால் இப்படியும் வரத் தான் செய்யும். இவற்றையெல்லாம் சகித்து கொள்ள முடியாதவர்கள் பொது வாழ்விலே இருக்கவே முடியாது என்று சவுக்கு சங்கர் குறிப்பிட்டார்.