அமெரிக்கா | மிசிசிப்பி மாகாணத்தை துவம்சம் செய்த டொர்னாடோ: சுமார் 23 பேர் பலி

மிசிசிப்பி: அமெரிக்க நாட்டின் மிசிசிப்பி மற்றும் அலபாமா மாகாணத்தில் அதிசக்திவாய்ந்த டொர்னாடோ சூறாவளி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 23 பேர் இதுவரை இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதியில் தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல். அந்த பகுதியில் இடியுடன் கூடிய மழை பொழிவு இருப்பதாகவும் தெரிகிறது.

வெள்ளிக்கிழமை பின்னிரவு நேரத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சுமார் 160 கிலோ மீட்டர் அளவுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அந்த பகுதியின் அரசு மற்றும் அமெரிக்க நடுவண் அரசு உறுதி செய்துள்ளன. மிசிசிப்பி மாகாணத்தின் சில்வர் சிட்டி பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக தகவல். இந்த சீற்றத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என மிசிசிப்பி மாகாண அவசரகால மேலாண் ஏஜென்சி அச்சம் தெரிவித்துள்ளது.

அதேபோல சுமார் 1,700-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் ரோலிங் ஃபோர்க் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல். இந்த சூறாவளியினால் தங்கள் வீடுகளில் மக்கள் சிலர் வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் தகவல். சமூக வலைதளங்களில் இந்த சீற்றத்தின் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரோலிங் ஃபோர்க் மிகப்பெரிய அளவில் பேரழிவிற்கு உள்ளாகி உள்ளது என யுனைடெட் கஜுன் கடற்படைத் தலைவர் டோட் டெரெல் தெரிவித்துள்ளார். மேலும், இதனை 2011-ல் மிசோரி மாகாணத்தின் ஜோப்ளின் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி உடன் அவர் ஒப்பிட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட பாதிப்பில் சுமார் 161 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

எம்எஸ் டெல்டாவில் உள்ள மக்கள் பலருக்கு உங்கள் பிரார்த்தனையும், கடவுளின் பாதுகாப்பும் தேவை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ வசதியை போர்க்கால அடிப்படையில் வழங்கி வருகிறோம். தேடுதல் மற்றும் மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என மிசிசிப்பி மாகாண ஆளுநர் ஜோனதன் டேட் ரீவ் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் சூறாவளியின் பாதிப்பில் சிக்கிய இடங்களின் படங்கள் பகிரப்பட்டு வருகிறது. சில படங்களில் வீடுகள் இடிந்தும், கார்கள் திரும்பி நிற்பதையும் பார்க்க முடிகிறது. மக்கள் இடிபாடுகளில் இருந்து வெளிவரும் படங்களும் பகிரப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.