இறைநிலை சிந்தனையை அடைவதே சூஃபித்துவத்தின் முக்கிய கோட்பாடு. அச்சிந்தனையை இசை மூலம் வெளிப்படுத்துவதே சூஃபி இசை.
சூஃபி இசையைத் தமிழகத்தில் காண்பது அரிது. இன்றைய நாட்களில் சூஃபித்துவத்தை பின்பற்றுபவர்கள் தமிழகத்தில் சொற்பம் தான் என்று கூறப்படுகிறது. சூஃபி தத்துவம் குறித்தும், சூஃபி இசை குறித்தும் முழுமையாக அறிந்து கொள்ள சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள ஆரிஃப் உல்லாஷாவையும் அவரது குழுவையும் சந்திக்கச் சென்றோம். வெள்ளை நிற ஆடை, பச்சை நிற முண்டாசுடன் புன்னகையுடன் எங்களை வரவேற்றார் ஆரிஃப். ஆரிஃபைக் காட்டிலும் அவரது குழுவினர்கள் வயதில் மூப்பு. அவர்கள் யார் எனக் கேட்டதற்கு, `அவர்கள் என் சிஷ்யர்கள்’ என்றார் ஆரிஃப். வயது மூப்பாக இருந்தாலும் குரு என்கிற முறையில் ஆரிஃபின் சொல்லுக்கு அலாதி மரியாதை கொடுத்தனர். இதுபோன்ற பல சுவாரஸ்யமானத் தகவல்களை கூறத் தொடங்கினார் ஆரிஃப்.
“சூஃபிக்கு மதம் என்பது கிடையாது. சூஃபி என்பது ஆன்மாவை புனிதப்படுத்தும், ஒழுக்கத்தை போதிக்கும். கவிஞர் ரூமி தான் சூஃபி தத்துவத்தை முதன்முதலில் தோற்றுவித்தார். இந்தியாவில், ஹரிப் நவாஸ் தான் சூஃபியைத் தோற்றுவித்தார். சூஃபி தத்துவத்தில் இதுபோன்ற பல மகான்கள் திருச்சி, நாகூரில் இருக்கின்றனர். சூஃபி எந்த மதத்திற்கும் தொடர்புடையது அல்ல. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே நிலவும் உறவு முறையைக் காட்டுவது தான் சூஃபி. இசைக்கும் சூஃபிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.
சூஃபி ஆளுமைகள் சூஃபி இசையில் தப்லாவை முதன்மை இசை கருவியாக பயன்படுத்தினர். சூஃபி இசையில் டஃப், தம்பூரா, மிருதங்கம், ஹார்மோனியம் போன்ற இசைக் கருவிகளையும் பயன்படுத்துவார்கள். நாங்கள் 5 தலைமுறையாக சூஃபியைப் பின்பற்றி வருகிறோம், தர்காகளில் சூஃபி பாடல்களைப் பாடுவோம். வீடுகளுக்கு வருமாறு எங்களுக்கு அழைப்பு கொடுப்பார்கள். வீடுகளுக்குச் சென்று சூஃபி கருத்துக்களைப் பாடல்களாகப் பாடி வருவோம். சாய் பாபா, அம்மன், சிவன் கோயில்களிலும் சூஃபி பாடல்களைப் பாடியிருக்கிறோம். அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களிலும் சூஃபி பாடல்களைப் பாடியிருக்கிறோம்.” என்று கூறியவர் இடையிடையே சூஃபி பாடல்களைப் பாடி உற்சாகமூட்டினார்.
“5 தலைமுறைகளாக சூஃபித்துவத்தை பின்பற்றி வருகிறோம். எங்களுக்கு விதிமுறைகள் பல இருக்கின்றன, அதனால் தான் நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோம். பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி அவரவர் மதத்தில் அவர்களது வழிபாட்டில் அவரவர் பெரியவர் என்பது தான் சூஃபியின் கருத்து. தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகூர் போன்ற பகுதிகளில் சூஃபி பாடல்களைத் தமிழில் பாடக்கூடிய பீர் பாய்கள் இருக்கின்றனர். அண்ணன், தம்பிகள் எனத் தொடர்ந்து சூஃபியைப் பின்பற்றுபவர்கள் தான் பீர் பாய்கள்.தமிழில் பாடக்கூடியவர்கள் பல நல்ல கருத்துக்களை வழங்கியிருக்கின்றனர்.பக்கீர்கள் வீடுகளுக்குச் சென்று காணிக்கையும் பெறுவார்கள்.நான் பக்கீராகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.இதில் பல பொறுப்புகள் இருக்கின்றன. முரீத்,தரிக்,கிலாஃப்ட் என இந்த பொறுப்புகள் பல நிலைகளில் இருக்கிறது. என்னுடன் 15 நபர்கள் இருக்கிறார்கள்.” என சூஃபி குறித்து பலர் அறியாததைக் கூறிய ஆரிஃபைத் தொடர்ந்து அவரது குழுவினர்கள் பல தகவல்களை பகிரத் தொடங்கினார்கள்.
முதலில் வந்து பேசிய ஆசிப் உல்லாஷா ,” நாங்கள் பல தலைமுறைகளாக சென்னையில் தான் வசித்து வருகிறோம்.நாங்கள் தலைமுறை தலைமுறையாக சூஃபியைப் பின்பற்றி வருகிறோம்.நான் பக்கீராகி 30 ஆண்டுகள் கடந்துவிட்டன.” என்றார். இமாம் உல்லாஷா, “எங்கள் அப்பா,தாத்தா இருவருமே பக்கீர்கள் தான். இதுதான் எங்களுக்குத் தொழில். சூஃபி பாடல்களை பாடும் பொது குஷியாக இருக்கும்” என உற்சாக சிரித்தார்.
அஸ்ருல் உல்லாஷா, ” 10 வயதில் என் தயார் என் மாமாவிடம் சேர்த்துவிட்டார்.என் மாமா தான் என் குரு.அன்று முதல் இன்று வரை சூஃபியைப் பின்பற்றி வருகிறேன். வீடுகளுக்கும், சந்தன கூடு நிகழ்ச்சிக்கும் சென்று சூஃபி பாடல்களைப் பாடுவேன். ஏ.ஆர் ரஹ்மான் வீடுகளுக்கு சென்று பாடல்களை பாடுவோம்.அவர் எங்களுக்கு பல உதவிகளைச் செய்வார்.லாக்டவுன் சமயங்களில் எங்களுக்கு அரிசி கொடுத்து உதவினார்.வருடத்திற்கு ஒரு முறை அஜ்மீர் தர்காவுக்கு எங்களை அனுப்பி வைப்பார்.” என்றவருக்கு ஏ.ஆர் ரஹ்மான் மீது அவ்வளவு பிரியாமும் மரியாதையும்.
“சூஃபியில் ஏழைகள் மட்டும் தான் இருக்கிறார் என்ற கணிப்பு தவறானது .பெரிய பணக்காரர்களும் ,மகாராஜாக்களும் சூஃபியைப் பின்பற்றியுள்ளனர்.மகாராஜா திப்பு சுல்தான் பக்கீராக இருந்தவர் தான்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் சூஃபியைப் பின்பற்றுபவர்தான். இது போன்று பலர் சூஃபியைப் பின்பற்றி பல நல்ல செயல்களை செய்துள்ளனர்.’திருமணம் என்னும் நிக்கா’ திரைப்படத்தில் இயக்குனர் அனீஸ் எங்களுக்கு வாய்ப்பளித்தார்.எனது அப்பா, தாத்தாவும் எம்.ஜி.ஆர்,சிவாஜியுடன் பணியாற்றியுள்ளனர்.
‘திருமணம் என்னும் நிக்கா’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் எங்களுக்கு வாய்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து ‘ஜமீலா’ சீரியலில் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. கோக் ஸ்டுடியோ தமிழில் ஒரு பாடலில் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.” என்றவர் தனது வாழ்வியல் குறித்து பகிர்ந்து கொண்டார். அவர்,” எங்களுக்கு வீடு வசதிகள் பெரிதாக இல்லை.எங்கள் குழந்தைகள் இப்போது நன்றாக படித்து வருகிறார்கள்.படித்ததவர்கள் சூஃபி கருத்துக்களை கூறினால் நன்றாக இருக்கும். எங்களுடைய தலைமுறை சூஃபி கருத்துகளை பாடல்களாக பாடி வருகிறோம்.” என்றவர் கண்ணில் பெருமிதம். சூஃபி கலைஞர்களின் வாழ்க்கை குறித்தான டாக்குமென்ட்ரியைக் காண – SUFI SINGERS யார் இந்த Sufi பக்கீர்கள் | 5 தலைமுறை கலைஞர்களின் வாழ்க்கைக் கதை