ஜெயங்கொண்டத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு என்பவர் பணியாற்றி வருகிறார். இதே ஜெயங்கொண்டத்தின் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் என்பவர், சாலை பணி – களம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இவரிடம் உதவி கோட்ட பொறியாளர் வஹிதா பானு, ஒப்பந்த தொகையில் 2 சதவீதம் கமிஷனாக கேட்டுள்ளார். அதன்படி அந்த பணத்தை அவர் பெற்றபோது, கையும் களவுமாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின்படி கமிஷன் தொகையை பெறுவதற்காக வஹிதா பானு ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு அருகே சென்ற போது, ரசாயனம் பூசப்பட்ட ரூ.30 ஆயிரம் பணத்தை லஞ்சமாக அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் வாங்கியவுடன், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வஹிதா பானுவை அழைத்துச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM