ஆங்கிலேயரால் பெருமை; `ஊட்டி வர்க்கி'க்கு புவிசார் குறியீடு…! என்ன சிறப்பு?

ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் உதகை பூங்கா அழகை கண்டு ரசிப்பதோடு, ஊட்டி வர்க்கியை சூடான தேநீருடன் ருசித்து சாப்பிடுவதுண்டு. சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் போது, வர்க்கியை வாங்கிச் செல்லதுண்டு.

கோதுமை வர்க்கி

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஊட்டியில் மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிட கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த வர்க்கி. இது மொறு மொறுப்பான சுவையுடன் இருப்பதால் குளிருக்கு தேநீருடன் சாப்பிட சூடான, சுவையான நொறுக்குத்தீனியாக இருக்கும். அதனால் பயணிகள் அனைவரும் விரும்பி வாங்குவதுண்டு.

இந்த ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு கிடைப்பது ஊட்டியின் பாரம்பரியத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

ஆங்கிலேயேர்கள் ஆட்சியில் அவர்கள் பிஸ்கெட் வகைகளை விரும்பி உண்பது வழக்கம். அதற்கு மாற்றாக ஆங்கிலேயேர்கள் விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனியாக இங்குள்ள மக்களால் கண்டு பிடிக்கப்பட்டது தான் வர்க்கி. இது மைதா மாவு, டால்டா, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை நன்கு பிசைந்து மாவுபோல வைத்துக்கொண்டு, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, அடுமனையில் வேக வைத்து தயாரிக்கின்றனர்.

ஊட்டி வர்க்கி

தேவையான வடிவத்தில் தயார் செய்கின்றனர். மசாலா அல்லது சர்க்கரை கலந்து இனிப்பு வர்க்கி, கார வர்க்கி என பலவகைகளில்  தயாரிக்கப்படுகிறது.

மற்ற மாவட்டங்களில் இந்த வர்க்கிகள் தயாரிக்கப்பட்டாலும், நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வர்க்கிகள் தனி மணம், சுவை கொண்டவை என கருதுவதால் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு இங்கிருந்து விற்பனைக்குச் செல்கிறது. அத்துடன் கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் இங்கிருந்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள பேக்கரிகள், டீ கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில் இந்த வர்க்கி பிரபலமாக விற்கப்படுகின்றன. இதனால் நீலகிரியில் ஒருநாளுக்கு சுமார் 10 முதல் 15 டன் வரை உற்பத்தி செய்கின்றனர்.

இப்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமே ‘ஊட்டி வர்க்கி’ என அழைக்கப்படும். ஊட்டியை தவிர மற்ற இடங்களில் தயாரிக்கும் வர்க்கியையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்தால், அதை சட்டப்பூர்வமாக தடுக்க முடியும். இதனால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் மேம்படும். இந்த மாவட்டத்தில் 100 முதல் 150 வர்க்கி உற்பத்தியாளர்கள் பாரம்பரியமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு கிடைக்கும்.

ஊட்டி வர்க்கி

ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு பெற இந்த உற்பத்தியாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் பயனாக இப்போது புவிசார் குறியீடு பட்டியலில் ஊட்டி வர்க்கி இடம்பெற்றது. இதுகுறித்து புவிசார் குறியீடுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது. மார்ச் 30-ந் தேதிக்குள் இதற்கு யாரேனும்  ஆட்சேபனை தெரிவித்தால்,  மறுபரிசீலனைக்கு வரும். ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விடும்.

வருகிற 31-ந் தேதியில் இருந்து ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற அங்கீகாரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

புவிசார் குறியீடு ஏன்?

உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்றும் உணவின் தரம் அங்குள்ள நிலத்தின் தன்மை, நீரின் தன்மை, தட்பவெப்ப நிலை ஆகிய காரணங்களால் மாறுபடும். இதை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் புவிசார் குறியீடு, உற்பத்தி செய்யப்படும் இடத்தின் பெருமை, பொருட்களின் பாரம்பரியம், தரம் ஆகியவற்றிற்கு சான்றாக அமைகிறது.

புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு வாங்க அது விவசாய பொருட்களாகவோ, வேளாண் பொருட்களாகவோ, கைவினை இயற்கை பொருட்களாகவோ இருக்க வேண்டும். இந்தப் பொருள்களைப் பற்றி உலக நாடுகள் அறிந்து கொள்ளவும், ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு இந்த புவிசார் குறியீட்டை வழங்குகிறது.

புவிசார் குறியீட்டை வைத்து அந்த பொருள் எந்த இடத்தில் தயாரிக்கப்படுகிறது? அந்த பொருட்களின் தரம் என்ன என்பதை அறியலாம்.  ஒரே மாதிரியான பெயரில் தயாரிக்கப்படும் போலி நிறுவனங்களுடைய பொருட்களை கண்டறிந்து தடை செய்ய இந்த புவிசார் குறியீடு பயன்படுகிறது.

உலக வணிக அமைப்பில் (WTO) உறுப்புநாடான இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு, 1999 நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 2003-ல் நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவுசார் சொத்துரிமை துறை புவிசார் குறியீடு என்ற அங்கீகாரத்தை 2003-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.

இந்த சட்டத்தினால் என்ன பலன் ?

இதனால் குறிப்பிட இடத்தில் உருவாகும் பொருட்களை மக்களால் ஏமாறாமல் வாங்க முடியும். பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கும் தகுந்த லாபம் கிடைக்கும். சர்வதேச அளவில் இதனால் ஏற்றுமதி அதிகரிக்கும், பொருட்களுக்கான சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.