இரட்டை என்ஜின் அரசு மீண்டும் வரவேண்டும் என கர்நாடகா முடிவு செய்து விட்டது: பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் மாநிலத்தில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பொது கூட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவா்கள் பஸ் யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஆளும் பா.ஜ.க. ஏற்கனவே ஜனசங்கல்ப யாத்திரையை நடத்தியது.

தொடர்ந்து தற்போது விஜய சங்கல்ப யாத்திரையை கடந்த ஜனவரி 21-ந்தேதி தொடங்கியது. தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட கட்சியினர் கர்நாடகாவுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பிரசார பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, பா.ஜ.க.வின் 2-வது விஜய சங்கல்ப ரத யாத்திரையை, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 2-ந்தேதி கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் நந்த்கத் கிராமத்தில் தொடங்கி வைத்து பேரணியிலும் பங்கேற்றார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு இன்று வருகை தந்துள்ளார். இதற்காக, தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்ற அவர், அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைத்தார். பின்னர் பெங்களூருவுக்கு வந்து, கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இதன்பின்பு, பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு வந்து பா.ஜ.க.வின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கர்நாடகாவில் நீண்டகாலம் ஆட்சி செய்த சந்தர்ப்பவாத மற்றும் சுயநல அரசாங்கங்களை மக்கள் பார்த்து விட்டனர்.

இதனால், மாநிலம் பாதிப்படைந்து விட்டது. அதனாலேயே, மாநில வளர்ச்சிக்காக பா.ஜ.க.வின் நிலையான அரசு தேவைப்படுகிறது. இரட்டை என்ஜின் அரசு மீண்டும் வரவேண்டும் என கர்நாடகா முடிவு செய்து விட்டது என பேரணியில் அவர் பேசியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா காங்கிரஸ் கட்சி தொண்டரை அறையும் வீடியோ ஒன்று வைரலானது. இதனை குறிப்பிட்டு, பிரதமர் மோடி பேசும்போது, சமூக ஊடகத்தில் வெளியான வீடியோ ஒன்றை பற்றி எனக்கு தெரிய வந்தது.

அதில், ஒரு பெரிய தலைவரான சித்தராமையா சொந்த கட்சி தொண்டரை அறையும் காட்சி இடம் பெற்று இருந்தது. சொந்த தொண்டர்களை மதிக்காதவர்கள் எப்படி மக்களை மதிப்பார்கள்? என சொந்த கட்சி தொண்டரை சித்தராமையா அறையும் நிகழ்வை சுட்டி காட்டி பேசியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.