ஈரோடு மாநகராட்சி, சூரியம்பாளையம் பகுதி, 4ஆவது வார்டுக்குள்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. அமைச்சர் சு.முத்துசாமியின் சொந்த தொகுதியான ஈரோடு மேற்கு தொகுதிக்குள்பட்ட இந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 400 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. அதில் 3 லிட்டர் குக்கர், எவர்சில்வரில் பெரிய தட்டு, சின்னதட்டு, தம்ளர், எவர்சில்வர் ஜக் என சுமார் ரூ.1,500 மதிப்பிலான பொருள்கள் இருந்தன.
திடீரென பரிசு பொருள்களை மக்களுக்கு வாரி வழங்குவதற்கான காரணம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தி.மு.க.வின் வார்டு பிரதிநிதியான பழனியம்மாளிடம் பேச்சு கொடுத்தோம்.
நம்மிடம் பேசிய அவர், “இன்னிக்கு (நேற்று) மதியம் எங்க கட்சிக்காரங்க வந்தாங்க… சாெட்டையம்பாளையம் ரேஷன் கடையில் பொருள்களை வாங்குறவங்க லிஸ்ட்டை அவங்க வைச்சிருந்தாங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு டோக்கன் கொடுத்துட்டு, இன்னிக்கு நைட்டே பொருள்களை தர்றதா சொல்லிட்டு போனாங்க. சொன்னபடி அமைச்சர் சு.முத்துசாமி, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட கட்சிக்காரங்களோட 2 மினி லாரியில பொருள்களை ஏத்திட்டு வந்து டோக்கன் உள்ளவங்களுக்கு பாெருள்களை சப்ளை செஞ்சிட்டு போனாங்க.
இப்ப என்ன பிரச்னைன்னா… சாெட்டையம்பாளையம் ரேஷன் கடையிலே பொருள்களை வாங்குறவங்களுக்கு தான் பொருள்களை கொடுத்திருக்காங்க… அதைக் கேள்விப்பட்டு பக்கத்தில இருக்குற நரிப்பள்ளம், மறவாபாளையத்தில் இருந்து டோக்கனை எடுத்துட்டு வந்துட்டாங்க. அவங்களுக்கு ஓரிரு நாள்களில் பொருள்கள் கொடுக்குறதா கட்சியின் முக்கிய நிர்வாகிங்க சொல்லிட்டு போயிருக்காங்க. அதேசமயம், அம்பேத்கர் நகரில் டோக்கன் வைத்து கொண்டு பொருள் வாங்காதவங்க லிஸ்ட் கேட்ருக்காங்க… அதை கொடுத்ததும் எங்க ஏரியாவில விடுபட்ட மற்றவங்களுக்கும் பரிசு பொருள்கள் வந்து சேரும்.” என்றார்.
பரிசுப் பொருள்களை விநியோகித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, “முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்டங்களில் தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். ஈரோடு மேற்கு தொகுதியில் இன்றுமுதல் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 50,000 புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்.