கன்னியாகுமரி மாவட்டத்தில் இறகுகள் வெட்டப்பட்டு வீட்டில் வளர்க்கப்பட்ட 42 பச்சை கிளிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவை உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி வீடுகளில் ஆந்தை, மைனா, கழுகு, பச்சை கிளி, மரகத புறா போன்ற பறவைகளை வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். இச்சட்டத்தை குறிப்பிட்டு, ‘பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வன விலங்குகளை வளர்ப்பு பிராணியாக வைத்திருந்தால் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கவும்’ என கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து இதுவரை 42 பச்சை கிளிகள் மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பச்சை கிளிகளின் இறகுகள் வெட்டப்பட்டும், நீக்கப்பட்டும் உள்ளதால் அவை தற்போதைய நிலையில் சுதந்திரமாக பறக்க விட முடியாத நிலையில் உள்ளது. எனவே அவை இறகுகள் முளைத்து பறக்க தகுதியாகும் வரை, அவற்றை உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்காவில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக உதயகிரி கோட்டையில் பராமரிக்கப்பட்ட சினேரியஸ் கழுகு ராஜஸ்தான் கொண்டு செல்லப்பட்ட தால், அந்த கழுகிற்காக உருவாக்கப்பட்ட பெரிய கூண்டில் இந்த கிளிகள் சுதந்திரமாக விடப்பட்டுள்ளது. இதில் கிளிகள் பறப்பதற்கு ஏதுவாக சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிளிகளின் இறகுகள் வளர்ந்து பறக்க தயாராகும் வரை அவை பராமரிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM