சமயபுரம் அருகே மூதாட்டியொருவரை ஏமாற்றி, அவரது வங்கிக் கணக்கில் இருந்த 3,78,848 ரூபாயை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இந்த சைபர் கிரைம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் விஜயராணி (63). தனியாக வசித்து வரும் இவரது செல்போன் எண்ணிற்கு சமீபத்தில் மூன்று புதிய செல்போன் எண்களிலிருந்து ‘நட்ராஜ் பென்சில் கம்பெனியில் பகுதி நேர வேலை வாங்கித் தருகிறோம்’ என குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜயராணியை தொடர்பு கொண்ட மர்ம நபரொருவர், “உங்களின் ஏ.டி.எம் கார்டு காலாவதி ஆகிவிட்டது. அதனை புதுப்பிக்க வேண்டும். முகவரியும் புதுப்பிக்க வேண்டும்” எனக் கூறி விவரங்களை கேட்டுள்ளார். இதனை உண்மையென நம்பிய விஜயராணியும், அந்த மர்ம நபரிடம் தனது ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் கார்டு விவரங்களை தெரிவித்ததுடன் செல்போனிற்கு வந்த OTP எண்ணையும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3,78,848 மொத்தமாக வேறொருவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்துதான், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார் விஜயராணி. தொடர்ந்து திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார் அவர். அதன் பேரில் சைபர் க்ரைம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM