என்எல்சிக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருப்பதாக
ராமதாஸ் குற்றசாட்டு வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தின் கட்டாய நிலப்பறிப்பால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு விடையளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார். பேரழிவு சக்தியான என்எல்சியை தமிழகத்தின் ஆபத்பாந்தவனாக சித்தரிக்கும் அளவுக்கு, சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் பொய்களை குவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
என்எல்சி நிறுவனம் கேட்டதையெல்லாம் வழங்கும் கற்பகத்தரு போலவும், நிலம் கொடுக்கும் மக்களுக்கு பணத்தையும், வேலைவாய்ப்பையும் வாரி வழங்குவது போன்ற மாயத்தோற்றத்தை அமைச்சர் ஏற்படுத்தி உள்ளார். என்எல்சிக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை அவையில் கூறியிருக்கிறார் அமைச்சர்.
தொழிற்சாலைகளுக்கு நிலம் கொடுத்தவர்களை பங்குதாரர்களாக அறிவிக்கும் வழக்கம் உலகம் முழுவதும் உள்ள நிலையில், வேலை கூட வழங்க மாட்டோம் என்ற கொள்கையை கடைபிடிக்கும் என்எல்சியை எதிர்த்து கேள்வி கேட்காமல், அதன் செய்தித்தொடர்பாளர் வேலையை தமிழக அரசும், அமைச்சரும் செய்து வருவது எந்த வகையில் நியாயம்? இது அவர்களின் மதிப்பை குறைத்துவிடாதா?
இவை அனைத்தையும் கடந்து என்எல்சியால் கடலூர் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், பாதிப்புகள் குறித்த எந்த வினாவிற்கும் சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளிக்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் கடந்த பல ஆண்டுகளாகவே என்எல்சியால் ஏதோ ஒரு வகையில் பாதிப்புகளுக்கு ஆளாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை பல்வேறு ஆய்வுகளும், அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன. என்எல்சி சுரங்கத்திலிருந்து வெளியேறும் கரியமில வாயு புவிவெப்பமயமாதலை விரைவுபடுத்துகிறது. ஆனால், இதுகுறித்தெல்லாம் அமைச்சர் தங்கம் தென்னரசு எதையும் கூறாமல் அமைதியாக கடந்து செல்கிறார்.
கடலூர் மாவட்டம் எத்தகைய சீரழிவுகளையும், பேரழிவுகளையும் எதிர்கொண்டாலும் அதுகுறித்து எந்தக் கவலையும் இல்லை. என்எல்சிக்கு ஆதரவாக செயல்படுவது தான் அரசின் கொள்கை என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் அமைச்சரின் பதிலுரை உள்ளது. கடலூர் மாவட்ட மக்களின் காயங்களையும், வலிகளையும் கண்டுகொள்ளாமல் என்எல்சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆதரவளிப்பது நியாயமல்ல.
தமிழக அரசை நான் மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்வதெல்லாம், கடலூர் மாவட்டத்தின் அழிவுக்கு தமிழக அரசு தெரிந்தோ, தெரியாமலோ ஆதரவளிக்கக் கூடாது என்பதைத் தான். கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை மதித்து என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக தமிழக அரசு ஓர் அங்குலம் நிலத்தைக் கூட கையகப்படுத்தாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். என்எல்சியை வெளியேற்றவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இவ்வாறு கூறியுள்ளார்.