கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டத்துக்கு என்றைக்கும் நல்ல திட்டங்களைக் கொடுத்தது அ.தி.மு.க-தான். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை, கடந்த ஆட்சியில் கொடுத்து கோவையை மாற்றியமைத்திருக்கிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஒரு திட்டத்தையும் கோவைக்குக் கொண்டுவரவில்லை. ஒட்டுமொத்தமாக திமுக-வின் மீது பெரும் அதிருப்தி இருப்பதால் எப்போது தேர்தல் நடந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்.
எங்கே சென்றாலும் மக்கள், எடப்பாடியார் முதல்வராக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர். மக்கள் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைப் பற்றித் தெரியாத விளம்பர முதல்வராக இருக்கிறார் தமிழகத்தில் பத்திரிகைத்துறையினர் மிரட்டப்படுகின்றனர்.
ஆளுங்கட்சிக்குச் சாதகமான செய்திகளை வெளியிடுமாறு அச்சுறுத்தப்படுகின்றனர். சமூக வலைதளங்களில் அரசை விமர்சிப்பவர்களைக்கூட காவல்துறையை விட்டு மிரட்டி, கைதுசெய்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் குடிநீர்ப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளைக்கூட மூடி சரிசெய்யவில்லை. ஊடகங்கள் முன்பு திட்டங்களுக்குப் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மட்டும் ஆளுங்கட்சியினர் கூறிவிட்டுச் செல்கின்றனர். எந்தப் பணியும் நடப்பதில்லை.
அதிமுக ஆட்சியில் என்ன செய்தோம் என்று மக்களுக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் கடந்த ஆட்சியைப் பற்றி குறை கூறாமல் மக்களுக்குத் தேவையானவற்றை ஆளுங்கட்சியினர் செய்ய வேண்டும்” என்று கூறினார்.