டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் அவர் தொடர்ந்து குடியிருக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரை வைத்துள்ளது எப்படி?’ என்று தெரிவித்தார்.இதை எதிர்த்து ராகுலுக்கு எதிராக குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, எம்பி, எம்எல்ஏக்கள் 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால், குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். தண்டனை விதிக்கப்பட்ட காலத்திற்குப் பின் மேலும் 6 ஆண்டுகள் என மொத்த 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதையடுத்து , நேற்று ராகுலை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்து, மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், ராகுல்காந்தி போட்டியிட்டு வென்ற வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது. ஆகையால் தகுதி நீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் பங்களாவை காலி செய்ய வேண்டும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ராகுல் காந்தி மேல் நீதிமன்றத்தில்ல் தன் மீதான தீர்ப்புக்கு தடை உத்தரவு பெற வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் டெல்லியில் எண்.12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் ராகுல் காந்தி குடியிருத்து வருவது குறிப்பிடத்தக்கது.