கடலூர்: விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில், அங்கு இருந்த 33 பெண்கள் உள்பட 142 பேர் கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள காப்பகங்களின் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் கடலூர் வன்னியர்பாளையம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த திருவள்ளூரை சேர்ந்த சேதுராமன், கிருஷ்ணகிரியை சேர்ந்த அஸ்லாம், கொல்கத்தாவை சேர்ந்த சோனா மகதூர், கேரளாவை சேர்ந்த பிஸ்மில்லா, திருநெல்வேலியை சேர்ந்த மனோஜ் ஆகிய 5 பேர் கடந்த 22ம் தேதி நள்ளிரவு அங்கிருந்து தப்பி சென்றனர். இவர்கள் 5 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் அருகே சுற்றித்திரிந்த சேதுராமனை போலீசார் பிடித்து பாதுகாப்பாக மீண்டும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதேபோல அஸ்லாம் என்பவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அவரது குடும்பத்தினர் போன் மூலம் காப்பக நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.