கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அவற்றை தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சமூகங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தேசிய தலைவர்கள் முகாம்
கர்நாடகாவில் மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அங்கு அரசியல் கட்சிகள் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவின் சார்பில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் தேசிய தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் சார்பிலும் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸின் ஜாக்பாட் வாக்குறுதிகள்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிவாரணம், வேலையில்லா டிப்ளமோ படித்த நபர்களுக்கு மாதம் ரூ.1,500 நிவாரணம், அரசு துறைகளில் காலிப் பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2,000, வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் 10 கிலோ இலவச அரிசி என பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.
பாஜகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
இந்தநிலையில் கர்நாடகாவில் வெற்றியை தீர்மானிக்கும் ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களின் வாக்குகளை கவர பாஜக தலைமையிலான அரசு முக்கிய நகர்வு ஒன்றை செய்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கான 4 சதவீத ஒதுக்கீட்டை நீக்கி, மாநில இடஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைச் செய்துள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கர்நாடக அரசு இடஒதுக்கீடு ஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 56 சதவீதமாக உயர்த்தியது. அதேபோல் முஸ்லிம்களுக்கான 4 சதவீத ஓபிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. முஸ்லிம்கள் இப்போது 10 சதவீத பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) வகைக்கு மாற்றப்படுவார்கள்.
முஸ்லீம்களுக்கான தனி இடஒதுக்கீடு நீக்கம்
சமீபத்திய மறுசீரமைப்புடன், முஸ்லிம்கள் இப்போது பிராமணர்கள், வைசியர்கள், முதலியார்கள், ஜைனர்கள் மற்றும் பிறரைக் கொண்ட EWS ஒதுக்கீட்டில் போட்டியிட வேண்டியிருக்கும். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பொம்மை, மதச் சிறுபான்மையினரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, எந்த நிபந்தனையும் இல்லாமல் EWS குழுவின் 10 சதவீத தொகுப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்றார்.
மத்திய அரசு வழங்கிய EWS ஒதுக்கீடு 10 சதவீதம் என்பது குறிப்பிடதக்கது. கடந்த ஆண்டு பெலகாவி சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது ஒக்கலிகார்களுக்கு 4 சதவீதமும் மற்றும் லிங்காயத்துகளுக்கு 5 சதவீதமும் என இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தநிலையில் முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு இப்போது பிரிக்கப்பட்டு ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகத்திற்கு வழங்கப்பட உள்ளது.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்; இதுக்கு முன் லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் வழக்கு நியாபகம் இருக்கா?
நான்கு சதவீதம் (சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு) 2சி மற்றும் 2டி என இரண்டாகப் பிரிக்கப்படும். ஒக்கலிகர்கள் மற்றும் பிறர்களுக்கான நான்கு சதவீத இடஒதுக்கீடு இனி ஆறு சதவீதமாகவும், வீரசைவ பஞ்சமசாலி மற்றும் பிறர் (லிங்காயத்துகள்) ஏழு சதவீதமாகவும் உயர்த்தப்படும் என்று முதல்வர் பொம்மை கூறினார்.