சென்னை: தமிழகத்தில் 1,021 மருத்துவர்களை தேர்வு செய்து விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில்களும் வருமாறு: மரகதம் குமரவேல் (அதிமுக): மதுராந்தகத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில்பாலாற்றின் குறுக்கில் அமைக்கப்பட்டுள்ள பாலம் மிகவும் மோசமானநிலையில் உள்ளது. மழைக்காலத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டு, அதன்பின் தற்காலிக பாலம் அமைக் கப்படுகிறது. இப்பாலத்தை கட்டிக் கொடுக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சோகமாக உள்ளது. பாலம் எந்த துறையின்கீழ் வருகிறது என்பதை பார்க்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலா, நெடுஞ்சாலைத் துறையிலா அல்லது நீர்வளத் துறையிலா என தெரிய வேண்டும். எல்லா பாலங்களையயும் நீர்வளத்துறை கட்டிக் கொடுக்க முடியாது. எங்கள் துறையில் வந்தால் கட்டிக் கொடுப்போம். இருந்தாலும், நீங்கள் பேசியதை எல்லா அமைச்சர்களும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். யாராவது ஒரு அமைச்சர் கட்டிக் கொடுப்போம்.
எத்தனால் தயாரிப்பு: ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): எத்தனால் தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கரும்பை போன்று, மரவள்ளிக்கிழங்கில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப்படும் தொழில்நுட்பம் இருப்பதால், அதற்கான தொழிற்சாலையை அரசு தொடங்க வேண்டும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: கரும்பு மட்டுமின்றி அரிசியில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. அதேபோல மரவள்ளிக்கிழங்கில் இருந்தும் தயாரிக்க முடியும். அரசை பொறுத்தவரை கொள்கை மட்டுமே வெளியிட முடியும். ஒவ்வொன்றுக்கும் தொழிற்சாலை அமைக்க முடியாது. தொழிற்சாலை அமைக்க முதலீட்டாளர்கள் முன்வந்தால் உதவிகள் செய்யப் படும்.
உடுமலை ராதாகிருஷ்ணன் (அதிமுக): எங்கள் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதால் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: முதல்வர் அறிவுறுத்தலின்படி 1,021 மருத்துவ பணியிடங்கள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 அல்லது 3 வாரங்களில் அந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
மொத்தம் 25 ஆயிரம் மருத்துவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 1,021 பேர் தேர்வு செய்யப்பட்டு, உறுப்பினர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு தேவையான பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர்கள் பதி லளித்தனர்.