லக்னோ, : உத்தரபிரதேசத்தில் பெண்ணை கொலை செய்த வழக்கில் கிளியின் சாட்சியால் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உ.பி,யின் ஆக்ராவைச் சேர்ந்த விஜய் சர்மா மனைவி நீலம் சர்மா. 2014 பிப்., 20ல் கணவர் குழந்தைகளுடன் வெளியே சென்ற போது, தனியாக இருந்து நீலம் சர்மா கொலை செய்யப்பட்டார். கணவர் திரும்பி வந்து பார்த்த போது கொலை செய்தவர்கள் வீட்டிலிருந்து எந்த பொருட்களையும் கொள்ளையடிக்காமல் சென்றது சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
இந்நிலையில் விஜய் சர்மா வீட்டில் அவரது மனைவி நீலம் வளர்த்த கிளி, அவர் இறந்த பின் சாப்பிடாமல் அமைதியாக இருந்துள்ளது.
இதை கவனித்த விஜய் சர்மா ஒருவேளை கிளி கொலையாளி நேரில் பார்த்திருக்கலாம் என சந்தேகப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பாக சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்களை கிளியிடம் ஒவ்வொன்றாக கூறியுள்ளார்.
தன் மருமகன் ஆசு பெயரைக் கூறியபோது கிளி ஆவேசம் அடைந்து ஆசு, ஆசு எனக் கத்தியுள்ளது.
இதுகுறித்து விஜய் சர்மா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்போதும் அந்த கிளி ஆசு பெயரை சொல்லும்போது மட்டும் ஆவேசத்துடன் கத்தியது.
இதையடுத்து போலீசார் ஆசுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தன் நண்பர் ரோணியுடன் சேர்ந்து நீலம் சர்மாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ரஷீப், குற்றம் சாட்டப்பட்ட ஆசு, ரோணிக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 72 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement