சமையல் எரிவாயு மானியம் ரூ.200 ஆக அதிகரித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சமையல் எரிவாயு விலை மாதம் ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.
இந்த மாதம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி, ரூ.1,118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்நிலையில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு வழங்கப்படும் 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
newstm.in