ஈரோடு: கைத்தறி பெட்ஷீட்டில் ஒருபுறம் தோனியின் உருவத்தையும், மற்றொரு புறம் விராட் கோலியின் உருவத்தையும் நெய்து சென்னிமலையை சேர்ந்த நெசவாளர் அசத்தி உள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அப்புசாமி என்பவர் கைத்தறி துணிகளுக்கு டிசைனராக இருந்து வருகிறார். இவர், ஏற்கனவே தனது ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபலங்களின் உருவத்தை வடிவமைத்து அதனை கைத்தறி நெசவு மூலம் பெட்ஷீட்டில் உருவாக்கி வந்தார்.
இந்நிலையில், தற்போது கடந்த 2 மாதங்களாக பல்வேறு கட்ட முயற்சிகள் செய்து இறுதியில் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனியின் படம் ஒருபுறமும், மற்றொருபுறம் விராட் கோலி உருவ படத்தையும் பெட்ஷீட்டில் வடிவமைத்துள்ளார். 30 இன்ச் நீளம் மற்றும் 20 இன்ச் அகலத்தில் இந்த பெட்ஷீட்டை உருவாக்கியுள்ளார். கம்ப்யூட்டரில் வடிவமைத்து எலக்ட்ரானிக் ஜக்கார்டு மூலம் நெசவு செய்யப்பட்டதாக வடிமைப்பாளர் அப்புசாமி கூறினார்.