கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு காட்டு யானை ஒன்று அருகே உள்ள பட்டா நிலத்திற்குள் வர முயன்றது. அப்போது அங்கிருந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தின் வன ஊழியர்கள் அந்த காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டு பணியில் ஈடுப்பட்டனர். ஊருக்குள் வந்த காட்டுயானையை வனத்துறையினர் விரட்டும்போது எதிர்பாராதவிதமாக யானை மின்கம்பத்தில் மோதியது. யானை மோதியதில் மின் கம்பம் யானை மீது விழுந்து மின்சாரம் தாக்கி ஆண் யானையானது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதையறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை ஊழியர்கள் மற்றும் மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்த யானையை பிரேத பரிசோதனை செய்வதற்காக கால்நடை மருத்துவ குழு கோவையில் இருந்து பூச்சியூருக்கு வந்துள்ளனர். வனத்துறை ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களும் இறந்த யானையை உடல் கூறு ஆய்வு செய்வதற்காக பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோல, கடந்த வாரம் மின்சாரம் தாக்கி 3 யானை உயிரிழந்த நிலையில் தற்போது கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு ஆண் யானை உயிரிழந்ததுள்ளது.