சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை வழிவகை செய்ய வேண்டும்: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புகள் வழிவகை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று ரூ.166 கோடியில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வரவேற்றார்.
இவ்விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறையிலுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மயிலாடுதுறை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை காணொலி மூலமும் திறந்து வைத்தனர்.

இவ்விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றபின் தமிழகத்திற்கு முதல்முறையாக வருகை தந்துள்ள நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வாழ்த்துகளை தெரிவித்து தமிழகம் சார்பில் வரவேற்கிறேன்.வலிமையுடைய அரசனை எதிர்த்து போராடி நீதி பெற்ற கண்ணகியின் மதுரை மண்ணிலிருந்து வரவேற்கிறேன்.

பொதுமக்களுக்கு சேவையாற்றுவதே எனது முன்னுரிமை, நாட்டிலுள்ள அனைவருக்காகவும் நான் பணியாற்றுவேன் என்று சொல்லி பொறுப்பேற்றுக்கொண்ட தாங்கள் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளீர்கள்.

தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் தங்களுக்குத் தனிப் பாசம் உண்டு. கோவிட் இரண்டாவது அலையின்போது, அதைக் கட்டுப்படுத்துவதில் நாட்டிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கியது என்று, நமது மருத்துவ உட்கட்டமைப்பைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை ஒரு வழக்கின்போது பாராட்டியிருந்தீர்கள். அதற்காக இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.

தொழில்நுட்பம், பதிவகம் மற்றும் நீதித் துறைச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பொறுப்பேற்றபோது சொன்னதற்கேற்ப, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் சமீபத்தில் வெளியாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னை உயர் நீதிமன்ற கிளை மதுரையில் அமைய அடித்தளமிட்டவர் கருணாநிதி, 1970ல் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு 2000ம் ஆண்டு அடிக்கல்நாட்டி தென்மாவட்ட மக்களின் கனவை நனவாக்கினார். நீதித்துறை உள்கட்டமைப்பு ஏற்படுத்துவதில் திமுக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. நீதி நிர்வாகம், பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குதல் உள்ளிட்ட பிற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முன்னுரிமை அளித்து செயல்படுகிறது.

2021ம் ஆண்டு பொறுப்பேற்று இன்று வரை புதிய நீதிமன்றங்கள் அமைக்க நீதிபதிகள் நியமனம், அலுவலக கட்டமைப்புக்காக ரூ.106கோடி 77 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், சேலத்தில் பட்டிலியனத்தவர்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை நீதிமன்ற 140 நீதிமன்றம், ஒரே நீதிமன்ற வளாகத்தில் ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் அதன் பழமை மாறாமல் ரூ.23 கோடி யில் சீரமைக்கப்படும்.மேலும் புதிய நீதிமன்றங்கள், குடியிருப்புகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்துவதற்கு ரூ.297 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.8 கோடி நிதி மானியம், புதிதாக பதிவு செய்யப்பட்டவ 1000 வழக்கறிஞர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் 3 ஆயிரம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு செயல்களை செய்து வருகிறோம். நீதித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த திமுக அரசு சிறப்பாக மேற்கொள்ளும் என்று உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும். சென்னை, மும்பை, கோல்கட்டாவில் உச்சநீதிமன்ற கிளையை நிறுவ வேண்டும் என மூன்று கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

எங்களது கோரிக்கைகளை மத்திய அரசும், நீதித் துறையும், உச்ச நீதிமன்றமும் நிறைவேற்றித் தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நீதித்துறையானது சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்கி ஒவ்வொரு சாமானியனின் இறுதி நம்பிக்கையையும் காப்பாற்றட்டும். நீதித்துறையின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும். சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புகள் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி டி. ராஜா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, இ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மதுரை மாநகராட்சி மேயர் வி.இந்திராணி, சு. வெங்கடேசன் எம்பி, எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் உள்பட கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.