புதுடெல்லி: சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை உடனடியாக தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெறுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களில் யாரேனும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால், அவர்கள் உறுப்பினர் தகுதியை இழப்பது பற்றி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டப் பிரிவுகளின்படி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்சினையால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டவர்கள், தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்கள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள், தீவிரவாத செயல்களில் தொடர்பு, பலாத்காரம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றம், மக்களிடையே மத வேற்றுமையை தூண்டி கலவரம் ஏற்படுத்துவது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், தேர்தலின்போது வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல், வாக்குச் சீட்டுகளை அள்ளிச் செல்லுதல் போன்ற குற்றங்கள் மற்றும் ஊழல், முறைகேடு போன்ற குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினராக பதவியில் தொடர முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8ல் அடங்கியுள்ள (1), (2), (3) ஆகிய உட்பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதோடு, தண்டனை முடிந்த பிறகும் அடுத்த 8 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டி யிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எனினும் தண்டனை பெற்றாலும் கூட, உடனே பதவி இழக்காமல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் விதத்தில் அதே 8வது பிரிவின் (4)வது உட்பிரிவு பாதுகாப்பு அளித்து வந்தது. அதாவது, விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டதில் இருந்து அடுத்த 90 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் முறையீடு செய்யும் எம்பி எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை இழக்க மாட்டார்கள் என்று அந்த உட்பிரிவில் கூறப்பட்டிருந்தது.
இந்த சட்டப் பிரிவு தந்த பாதுகாப்பால் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற பல எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்ந்து தங்கள் பதவிகளை அனுபவித்து வந்தனர்.இந்நிலையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 (4) பிரிவு, அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என அறிவிக்கக் கோரி கடந்த 2005ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் லில்லி தாமஸ், எஸ்.என்.சுக்லா என்ற 2 பேர் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2013ல் பிறப்பித்த உத்தரவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 (4)வது பிரிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என்றும், அந்த சட்டப்பிரிவு செல்லாது என்றும் பிரகடனம் செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் இன்று வரை கீழமை நீதிமன்றத்தால் இரண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் சூரத் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற வயநாடு தொகுதி எம்பி ராகுல்காந்தியின் பதவியும் மேற்கண்ட விதிமுறைகளால் பறிபோனது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அ.ப.முரளீதரன் என்பவர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குற்றவழக்கில் தண்டனை பெறும்போது, அவர்களை தகுதிநீக்கம் செய்வது அரசியல் சாசன விதிகளுக்கு விரோதமானது. அரசியல் சாசன மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8 (3)-ஐ சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும். தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை (எம்பி, எம்எல்ஏக்கள்) உடனடியாக தகுதி நீக்கம் செய்வது என்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து இந்த மனு அவசர மனுவாக வரும் திங்கட்கிழமை (மார்ச் 27) உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.