புதுடெல்லி: நாட்டில் சுங்கசாவடிகளுக்கு மாறாக ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறைகள் அடுத்த 6 மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் தொழில்கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது: அரசுக்கு சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் தற்போது ரூ.40,000 கோடி வருவாய் கிடைக்கிறது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இது ரூ.1.40லட்சம் கோடியாக உயரும். நாட்டில் உள்ள சுங்கசாவடிகளுக்கு மாற்றாக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண முறை உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசு ஆலோசித்து வருகின்றது. அடுத்த 6 மாதங்களில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணித்த சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.