சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 17 வயது மகள், வீட்டைவிட்டு வெளியில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனால் தன்னுடைய மகளைக் காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் சிறுமியைத் தேடிவந்தனர். சிறுமி குறித்து விசாரித்தபோது அவருக்கும், பட்டாபிராம், கோபாலபுரத்தைச் சேர்ந்த சதீஷ் (24) என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. சிறுமி காணாமல்போன தினத்திலிருந்து சதீஷும் வீட்டில் இல்லை. அதனால் இருவரையும் போலீஸார் தேடிவந்தனர்.
இந்தச் சூழலில் திருமுல்லைவாயல் ரயில் நிலையம் பகுதியில் சதீஷின் செல்போன் சிக்னல் காட்டியது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார், சதீஷைப் பிடித்தனர். அவரின் அருகில் காணாமல்போன சிறுமியும் இருந்தார். அவரின் கழுத்தில் புதிதாகக் கட்டிய தாலி இருந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமியை திருத்தணிக்கு அழைத்துச் சென்ற சதீஷ், அங்கு கோயிலில்வைத்து தாலி கட்டியது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், சதீஷிம் தானும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தார். உடனடியாக சதீஷ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்தனர். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். பின்னர் சிறுமிக்கு கவுன்சலிங் அளித்த போலீஸார், அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ், சிறையில் அடைக்கப்பட்டார்.