சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு விடுதியில் பெண்கள் குளிப்பதை மர்ம நபர் செல்போனில் வீடியோ எடுப்பதாக கடந்த 14-ம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. உடனடியாக போலீஸார் வீடியோ எடுக்கும் மர்ம நபரை தேடி வந்தனர். இந்தநிலையில் மீண்டும் 18-ம் தேதி மர்ம நபர் மீண்டும் அதேவிடுதியில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தார். அதைக் கவனித்த பெண்கள் மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து போலீஸார், விடுதி அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் பைக்கில் வந்த காட்சி பதிவாகியிருந்தது.
அதனால் சிசிடிவி மூலம் பைக் சென்ற இடங்களை போலீஸார் கண்காணித்தனர். 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தபோது வேளச்சேரியிலிருந்து புறப்பட்ட மர்மநபர் இறுதியாக பெசன்ட் நகருக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் போலீஸார் விசாரித்து சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த துரைராஜ் (27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து வேளச்சேரி போலீஸார் கூறுகையில், “கைதான துரைராஜ் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியில் வந்திருக்கிறான் துரைராஜ். இவர் அதிகாலை நேரங்களில் திருடுவதற்காக செல்வதுண்டு. அப்போது கழிவறையின் ஜன்னல்களைப் பார்த்தால் செல்போன் மூலம் அங்கு வருபவர்களை வீடியோ எடுத்து வந்திருக்கிறார். குறிப்பாக பெண்கள் விடுதியை குறி வைத்து இந்தச் செயலில் துரைராஜ் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவரின் செல்போனை பறிமுதல் செய்தபோது பெண்களின் குளியல் வீடியோக்கள் இருந்தன. அதுதொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இதையடுத்து கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் துரைராஜை ஒப்படைத்திருக்கிறோம். தற்போது துரைராஜிடம் கிண்டி அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்” என்றனர்