சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், `குமரன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலிருந்து தனக்கு குறைந்த வட்டியில் லோன் தருவதாக எஸ்.எம்.எஸ் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் வந்தது. அதை நம்பி, நானும் அந்த எஸ்.எம்.எஸில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டேன். அப்போது அந்த நிறுவன ஊழியர்கள், என்னிடம் நான் கேட்ட கடன் தொகையை விரைவில் ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்கு கமிஷனாக குறிப்பிட்ட தொகையை தங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறினர்.
இதையடுத்து தன்னுடைய மகளின் திருமணத்துக்கு சேர்ந்து வைத்த பணம் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி 2,43,650 ரூபாயை குமரன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன ஊழியர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். பின்னர் அவர் கேட்ட லோன் தொகைக்காக ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் லோன் தொகை வரவில்லை. அதோடு எனக்கு லோன் வாங்கித் தருவதாகக் கூறியவர்களின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகே நான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தெற்கு மண்டலத்தில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்துக்கு இந்தப் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது.
தென்சென்னை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். பழனிசாமியிடம் பேசியவர்களின் செல்போன் நம்பர்கள் அவர் அனுப்பி வைத்த வங்கி கணக்கு விவரங்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அது டெல்லியில் உள்ள வங்கி கணக்குகள் எனத் தெரியவந்தது. உடனடியாக சென்னை போலீஸார் டெல்லிக்குச் சென்றனர். அங்கு டெல்லி ரகுபீர் நகரில் தங்கியிருந்த விஸ்வநாதன் (29), டெல்லி பாகத்நகரைச் சேர்ந்த துரைமுருகன் (24), டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ் (33) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து செல்போன்கள், வங்கி கணக்கு அட்டைகள், காசோலை புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், மற்றும் 1,50,000 ரூபாய் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று பேரையும் விசாரணைக்காக சென்னைக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார், “கைதுசெய்யப்பட்ட மூன்று பேரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்கள். அதனால் இவர்கள் தமிழில் தெளிவாக பேசி இந்த மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் குமரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் லோன் தருவதாக பல்க் (bulk) எஸ்.எம்.எஸ்களை முதலில் செல்போன் நம்பர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர் ரேண்டமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் செல்போன் நம்பர்களுக்குத் தொடர்பு கொண்டு பெரியளவில் உத்தரவாதங்களின்றி குறைந்த வட்டியில் லோன் வேண்டுமா என்று போனில் கேட்பார்கள்.
அதை உண்மையென நம்பி லோன் தேவை என்று சொல்பவர்களின் ஆவணங்களை கேட்டு பெற்றுக் கொள்வார்கள். அதனடிப்படையில் லோன் தொகையை நிர்ணயித்து அதற்கு ப்ராசஸிங் பீஸ் குறிப்பிட்ட தொகையை முதலில் அனுப்பும்படி கூறுவார்கள். இப்படியே ஆசைவார்த்தைகளைக் கூறி நம்ப வைத்து மோசடியில் இந்தக் கும்பல் ஈடுபட்டு வந்திருக்கிறது. தொடர்ந்து இந்தக் கும்பல் யாரிடம் எல்லாம் மோசடியில் ஈடுபட்டது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.
எஸ்.எம்.எஸ் மூலம் வரும் தகவல்களை உண்மையென நம்பி மக்கள் தங்களின் பணத்தை யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.