சென்னை மாநகராட்சியின் 2023-24 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் என்னென்ன இடம்பெறும் ? எதிர்பார்ப்புகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் மார்ச் 27-இல் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு மேயர், வார்டு உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகு குறுகிய காலத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்தனர். இதனால் இந்த ஆண்டு பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சிங்கார சென்னை 2.O திட்டத்திற்கான பணிகள், புதிய சாலை வசதிகள், சுகாதாரதுறைக்கான நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம் பெறும் என்கின்றனர். அதேபோல் மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தவும், அம்மா உணவகத்திற்கான நிதி ஒதுக்கீடும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாநகராட்சி ஊழியர்கள் 3ஆம் மற்றும் 4ஆம் நிலை பணியாளர் நியமனம் உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கீடு அவசியமாக இருப்பதாகவும் வலியுறுத்துகின்றனர். பட்ஜெட்டானது 7 ஆயிரம் கோடி வரவு செலவுக்கானதாக இருக்கும் என்கின்றனர். மாநகராட்சி விரிவாக்கம் செய்வது போன்ற நடவடிக்கையும் முக்கிய அம்சமாக இருக்கும் என்கின்றனர். எனினும் வரி வருவாய் நிலுவையில் வைத்திருக்கும், வணிக நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றில் உடனடியாக வசூல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தாண்டு பட்ஜெட்டில் சுகாதாரத் துறை, சாலை வசதி உள்ளிட்டவைக்கு முக்கியத்துவமாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM