புதுடெல்லி: ‘‘இந்திய ஜனநாயகத்தை ராகுல் காந்தி இழிவுப்படுத்தியதால், ‘காந்தி’ என்று பெயர் வைத்தவர்கள் அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது’’ என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ பெயரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு நேற்றுமுன்தினம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நேற்று அவர் மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
இந்திய ஜனநாயகத்தையும் ராணுவத்தையும் நாட்டின் முக்கிய அமைப்புகளையும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இழிவுப்படுத்தி பேசுகிறார். வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், இந்தியாவை அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசுகிறார். அதற்காக காந்தி என்று பெயர் வைத்த அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது.
ஒட்டுமொத்த ஓபிசி பிரிவினரையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தி இருக்கிறார். தரக்குறைவாக இந்தியாவை இழிவுப்படுத்தி இருக்கிறார். அந்த பேச்சுகளுக்கு காங்கிரஸ் தலைவர் சிலர் நியாயம் கற்பிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.