2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு தேர்தல் பரப்புரை பேச்சுக்காக ராகுல் காந்தி அவர்களுக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டாண்டு தண்டணை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. தனது பேச்சில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று அவர் கூறிய பிறகும், நீதிமன்றம் அதை கவனத்தில் கொள்ளவில்லை. இதனிடையே இன்று மக்களவை செயலாளர், ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பதும், உடனடியாக இன்று அவர் எம்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் நீதிமன்றம் அவகாசம் தந்து அவருக்கு பிணை வழங்கியிருக்கும் நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை காரணம் காட்டி அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுவதாக கூட்டணி கட்சிகள் கூறிவருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தில், “இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன், நாட்டுக்காக எந்த விலையையும் கொடுக்க தயார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.