தமிழகத்தில் கஞ்சா கடையும் திறப்பார்கள் : இயக்குனர் பேரரசு

கே.என்.ஆர்.ராஜா தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ‛மாவீரன் பிள்ளை'. வீரப்பனின் மகள் விஜயலட்சுமி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ராதாரவி ஒரு தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசும்போது, நாயகன், நாயகி , இயக்குனர் யார் என பார்த்து ஒரு படத்தை முடிவு செய்யாதீர்கள். அந்த படம் என்ன கருத்து சொல்கிறது என்பதை பார்த்து முடிவெடுங்கள். நம்மூரில் முதலமைச்சரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம். வீரப்பன் மகளும் நடிக்கலாம். சினிமா யார் என்றாலும் ஏற்றுக்கொள்ளும். அந்த வகையில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமியை ஒரு புதுமுகமாக ஆதரிப்போம்.

தெருக்கூத்து இங்கே அழிந்து கொண்டே வருகிறது. ஆனால் டாஸ்மாக் முன்பாக குடித்துவிட்டு விதவிதமாக தெருக்கூத்து நடனங்களில் குடிப்பவர்கள் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். விஜய், பிரபுதேவாவை விட குடிமகன்கள் சூப்பராக ஆடுகிறார்கள். அதோடு மாணவ மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. மதுவிலக்கு என்ற வாக்குறுதியை கொடுத்துவிட்டு அதே மதுவை கொடுத்துதான் ஓட்டு போட சொல்கிறார்கள்.

இந்த படத்தில் ஆலயமணி எழுதிய சாராயம் அபாயம் என்கிற பாடல் ஒரு அபாயமணி. இந்த பாடலை டாஸ்மாக் முன்பாக ஒழிக்க விட்டு மது ஒழிப்பு பிரச்சாரம் கூட செய்யலாம். மதுவிலக்கை ரத்து செய்வதாக கூறினால் ஓட்டு போட மாட்டார்கள் என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். எந்த இடத்திலும் அரசியல்வாதிகள் பேசும் போது, போதைப்பொருட்கள் லிஸ்டில் மதுவை சேர்ப்பதில்லை. மதுவை விற்கலாம் என்றதால் இனிவரும் நாட்களில் டாஸ்மாக் போல கஞ்சா கடையையும் இவர்கள் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆன்லைன் ரம்மி மூலமாக எங்கேயோ எப்போதோ ஒன்று இரண்டு பேர் இறக்கிறார்கள். ஆனால் குடிப்பழக்கத்தால் தினசரி எத்தனையோ பேர் உடல் பாதிப்பு, விபத்து என்று உயிரிழக்கிறார்கள். ஆன்லைன் ரம்மியை ஒழிப்பதற்காக சட்டசபையில் குரல் கொடுப்பவர்கள் ஏன் மதுவை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. சாராயம் விற்கும் காசில் அரசாங்கம் நடத்துவது கேவலமான செயல்.

தமிழ்நாட்டு பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை. ஓசி பஸ்ஸும் தேவையில்லை. நீட் தேர்வை நீங்கள் ஒழிக்கிறீர்களோ இல்லையோ அதுவரை ஏழைய மாணவர்களும் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்றால், ஏன் நீங்களே மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க கூடாது. சாராயம் விற்ற காசை வைத்து எதுவும் எங்களுக்கு பண்ண வேண்டாம். பாவத்தை எங்கள் தலையில் கட்டாதீர்கள். கேளிக்கை வருகின்ற போது கேலிக்கூத்து வரியாக மாறிவிட்டது. இந்த மாவீரன் பிள்ளை படம் சமுதாயத்துக்காக எடுக்கப்பட்ட ஒரு சிறந்த படம் என்றார் பேரரசு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.