தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் கே.ஏ. ராஜேஷ் ராஜா தலைமை தாங்கி வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- தென்காசியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பொதுமக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மாற்றம் நடந்து விட்டது என்பதை உணர்த்துகிறது. சுமார் 40, 50 ஆண்டுகால கட்சியின் உழைப்பு, தமிழகத்தில் பா.ஜ.க. தனி முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. பா.ஜ.க.வின் இலக்கணமே நடத்திக் காட்ட முடியாது என்பதை நடத்திக் காட்டுவது தான்.
இந்திய வரைபடத்தில் காசியையும், தென்காசியையும் பிரதமர் இணைத்துள்ளார். தென்காசி என்ற பெயர் ஒருமைப்பாட்டை காட்டுகிறது. யாரும் விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. எனக்கும் அரசியலுக்கும், பல மைல் தூரம் இருந்தது. காலத்தின் கட்டாயம், ஆண்டவனின் அருள், மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் போன்றவை அரசியலுக்கு என்னை இழுத்தது. நீட் தேர்வு வேண்டும் என 2010-ம் ஆண்டு கையெழுத்து போட்டு அதனை கொண்டு வந்தது தி.மு.க. நீட் தேர்வால் தற்கொலை செய்த குழந்தைகளை வைத்து அரசியல் செய்து, வாக்கு பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது.
சரித்திரத்தை மாற்றுவது, பொய் சொல்லி மாட்டிக்கொண்டால் அதனை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்குவது உள்ளிட்ட முகங்களை கொண்டது தான் தி.மு.க. அதனை உடைக்க வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.விற்கு உள்ளது. அரசால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாடல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக நுழைவு தேர்வு வைத்து மாணவர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர்களிடம் கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை என பொய் சொல்கிறார்கள். மாடல் பள்ளி தமிழக அரசுக்கு வேண்டுமென்றால், எங்களுக்கு நீட் வேண்டும். தமிழகத்தில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்கும். 27 பேர் தமிழகத்தில் சாராயம் மூலம் வருவாய் ரூ.46 ஆயிரம் கோடி உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு அந்த தொகையிலிருந்து ரூ.2000 கோடியை மட்டும் மத்திய அரசிற்கு கொடுத்தால் விரைவில் மிகப்பெரிய அளவிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கலாம்.
ரூ.2 லட்சத்து 24 ஆயிரம் கோடி தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் 27 நபர்களிடம் உள்ளது. இந்த தொகை தமிழகத்தின் ஜி.டி.பி.யின் 10 சதவீதமாகும். ஏப்ரல் 14-ந் தேதி தி.மு.க.வின் உள்ள 27 முக்கிய புள்ளிகளின் ஊழல் பட்டியலை வெளியிட உள்ளேன். அன்று நடைபெறும் தமிழ் புத்தாண்டு, ஊழலுக்கு எதிரான திருவிழாவாக இருக்கும். அதனபிறகு பா.ஜ.க.வின் அரசியல் என்னவென்று அவர்களுக்கு தெரியும். காங்கிரஸ் கட்சியின் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. ராகுல்காந்தி பேசிய வார்த்தைக்காக தொடரப்பட்ட வழக்கில் வழங்கிய தீர்ப்பை அடுத்து, நாடாளுமன்ற சபாநாயகர் எடுத்த நடவடிக்கையால் மறுபடியும் வயநாட்டுக்கு தேர்தல் வரவுள்ளது. இந்தியாவில் மொத்தம் 9 எம்.பி.க்கள், 4 எம்.எல்.ஏ.க்கள் இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரசின் நிலைமை பரிதாபம். ஐ.சி.யு.வில் ஆக்சிஜன் கொடுக்கும் நிலையில் உள்ளது.
அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்-டாப் திட்டத்தை நிறுத்திவிட்டு அந்த நிதியிலிருந்து கடலில் பேனா வைக்க முயற்சி நடக்கிறது. பேனா சின்னம் வைக்கும் அன்றைக்கு தி.மு.க.வின் அழிவு ஆரம்பமாகும். சுத்தமான அரசியலுக்கு நாம் வந்து விட வேண்டும். திட்டங்களை நிறைவேற்றுவதில் தி.மு.க.வை போல் இல்லாமல் அனைத்து திட்டத்தையும் பிரதமர் மோடி அரசு, சொன்ன தேதிக்கு முன்னர் முடித்துக்காட்டுகிறது. 2024-ம் ஆண்டு நம்பிக்கை, மாற்றம், நாட்டின் முன்னேற்றம் ஆகிய மூன்றையும் பார்த்து மக்கள் வாக்கு பெட்டியில் தாமரை பட்டனை அழுத்தப்போகின்றனர். தமிழகத்திலிருந்து எம்.பி.க்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம். தி.மு.க. எந்த அஸ்திரத்தை எடுத்தாலும் நாம் பார்த்துக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தென்காசி நகர்மன்ற கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், லெட்சுமண பெருமாள், பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவர் ஆனந்தன், முன்னாள் கவுன்சிலர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.