“எதிர்கட்சித் தலைவரே இல்லாத, எதிர்கட்சிகளே இல்லாத தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அச்சத்தின் உச்சத்தில் பாஜகவினர் இருக்கின்றனர்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை நேற்று திருவள்ளூரில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த நாடாளுமன்ற பொது தேர்தலின் போது கர்நாடகாவில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி ‘இந்தியாவில் பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருப்பவர்களெல்லாம் மோடி மோடி என பெயர் கொண்டுள்ளார்களே… மோடி என்றாலே திருடர்கள் தானோ என்று அச்சப்படக்கூடிய வகையில் அவர்கள் இருக்கிறார்கள்’ என்று நகைச்சுவை ததும்பவும், ‘அந்த பெயர்களை (மோடி) கொண்டவர்கள் என்றாலே பொருளாதார மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்’ என வலியுறுத்தவும் பேசியிருந்தார். எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி அங்கு பேசவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிட நினைத்ததாக குஜராத்தில் மோடி என்ற பெயர்கொண்ட ஒருவர், அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாஜகவுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க மாட்டார் என்பதால், அவருக்கு பதிலாக ஆர்எஸ்எஸ்-காரர் ஒருவரை நியமித்து, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளனர். இது அப்பட்டமான அரசியல் விளையாட்டு. எதிர்கட்சித் தலைவரே இல்லாத, எதிர்கட்சிகளே இல்லாத தேர்தலை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறது பாஜக அரசு. அச்சத்தின் உச்சத்தில் பாஜகவினர் இருக்கின்றனர். இது கண்டனத்திற்கு உரியது. ராகுல் காந்தி மீதான மக்களவை தலைவரின் பதவி பறிப்பு ஆணையை திரும்பப் பெற வேண்டும்” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM