நியூயார்க்: ‘இந்தியாவின், மிகப்பெரிய நதியான கங்கை நதியை துாய்மைப்படுத்தும், ‘நமாமி கங்கை’ திட்டம், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது’ என, ஐ.நா., பிரதிநிதி புகழாரம் தெரிவித்து உள்ளார்.
தஜிகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இணைந்து நடத்தும், ஐ.நா., நீர்வளத் துறை மாநாடு – 2023, ஐ.நா.,வில் 22ல் துவங்கியது.
மாநாட்டின் கடைசி நாளான நேற்று, நெதர்லாந்தின் சர்வதேச நீர் விவகாரங்களுக்கான சிறப்புத் துாதர் ஹென்க் ஓவிங்க் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நதியான கங்கை, முக்கிய நீரோடை களில் ஒன்று. இது, முக்கியமான வளத்தை எவ்வாறு கையாள்வது என்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
வளர்ந்து வரும் சமூகங்களின் சூழலில் நீர் எப்படியெல்லாம் பாதிக்கப்படலாம் என்பதை கங்கை நதி காட்டுகிறது. எனவே நதியிலும், அது தரும் வளத்திலும் முதலீடு செய்தால், நாம் உயிர் வாழ முடியும்.
தண்ணீருக்கு நெருக்கடி ஏற்பட்டு, அது தரும் சவால்களுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், அதிலிருந்து நாம் எப்படி விடுபடுவது என்பது குறித்த உத்வேகத்தை கங்கை நதியை துாய்மைப்படுத்தும், ‘நமாமி கங்கை’ திட்டம் வழங்குகிறது.
இந்த திட்டம், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. நீர்வளத் துறையில் முன்னோடியாக விளங்கும் இந்தியாவுடன் கூட்டணியில் இருப்பதால் எங்களுக்கும் உத்வேகம் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.19.68 லட்சம் கோடி முதலீடு
ஐ.நா., நீர்வளத் துறை மாநாட்டில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது:நீர்வளத் துறையில், 19.68 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம். நீர்மட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளுடன் இணைந்து, உலகின் மிகப்பெரிய அணை மறுசீரமைப்பு திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. கங்கை நதியை துாய்மைப்படுத்தும் நமாமி கங்கை திட்டம், தேசிய லட்சியப் பணி. இந்தப் பணி, நதி புத்துயிர், மாசு குறைப்பு, சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நதிப் படுகை மேலாண்மைக்கான முழுமையான அணுகுமுறை ஆகியவற்றில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை உருவாக்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்