மதுரை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றங்களுக்கு ரூ.166 கோடி மதிப்பீட்டிலான கட்டடப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உச்சநீதிமன்ற தலைமை நீதியரசராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டுக்கு முதன்முதலாக வருகை தந்திருக்கும் நீதியரசர் சந்திரசூட் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரவேற்கிறேன்.
`பொதுமக்களுக்கு சேவையாற்றுவதே எனது முன்னுரிமை. நாட்டில் உள்ள அனைவருக்காகவும் பணியாற்றுவேன்’ என்று பதவியேற்ற தாங்கள், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் தங்களுக்குத் தனிப்பாசம் உண்டு. கோவிட் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் நாட்டிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கியது என்று ஒரு வழக்கின்போது பாராட்டியிருந்தீர்கள், அதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
தொழில்நுட்பம், பதிவகம் மற்றும் நீதித் துறைச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பொறுப்பேற்றபோது சொன்னதுபோல் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சமீபத்தில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைய அடித்தளமிட்டவர் தலைவர் கருணாநிதி. 1973-ஆம் ஆண்டு முதல் முயற்சி செய்து, 2000-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டி, தென் மாவட்ட மக்களின் கனவை நனவாக்கினார்.
நீதித்துறையின் உள்கட்டமைப்புக்காக தொலைநோக்குச் சிந்தனையுடன் தி.மு.க அரசு செயல்படும் என்பதை நினைவூட்டத்தான் இதை குறிப்பிட்டேன்.
நீதி நிர்வாகம், சுதந்திரமாகவும் நியாயமாகவும் செயல்படுவதற்கு ஏதுவாக பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குதலை உறுதி படுத்தும் வகையில் நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டட வசதி, மனித ஆற்றல், பிற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு பதவியேற்ற நாள் முதல், இன்றுவரை புதிய நீதிமன்றங்களை அமைக்கவும், தேவையான நீதிபதிகள், அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி 106 கோடியே 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர், திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவரும் 160 மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 60 நீதிமன்றங்களை ஒரே கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய ஏதுவாக 315 கோடி ரூபாய் செலவில் பல்லடுக்கு மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் கட்டடத்தை அதன் பாரம்பரியம் சிதையாமல் புதுப்பிக்க 23 கோடி ரூபாயும், புதியதாக நீதிமன்றக் கட்டடங்கள், குடியிருப்புக் கட்டடங்கள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டடங்களைப் பராமரிக்கும் பணிகளுக்கு 297 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வழக்குரைஞர் நல நிதிக்கு 8 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதோடு, சேமநல நிதி 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதியதாக பதிவு செய்யப்பட்ட 1000 இளம் வழக்குரைஞர்களுக்கு, ஊக்கத் தொகையாக மூவாயிரம் ரூபாய் மாதம்தோறும் வழங்கிட ஒப்பளிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படி பலவற்றைப் பட்டியலிட்டுச் சொல்ல நேரம் இல்லை. நீதித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் சமூக நீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலத்தோடு தமிழையும் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்ச நீதிமன்ற அமர்வுகளை அமைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசும், நீதித் துறையும், உச்ச நீதிமன்றமும் நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நீதித்துறையானது சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்கி ஒவ்வொரு சாமனியனின் இறுதி நம்பிக்கையையும் காப்பாற்றட்டும். நீதித்துறையின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும். சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புக்கள் வழிவகை செய்ய வேண்டும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.