புதுடெல்லி: பாஜக ஒரு குரலை மவுனமாக்க நினைத்தது. ஆனால் இன்று உலகின் ஒவ்வொரு மூலையும் இந்தியாவின் குரல் கேட்கிறது என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அவர்கள் ஒரு குரலை ஒடுக்க நினைத்தார்கள். இப்போது உலகின் ஒவ்வொரு மூலையும் இந்தியாவின் குரலைக் கேட்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கார்டியன் ஆஸ்திரேலியா, ஸ்பானிஷ் டெலிமுண்டோ, ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் அல்ஜிமின், சவுதி அரேபியாவின் அஸ்ரக் நியூஸ், பிரான்ஸின் ஆர்எஃப்ஐ, சிஎன்என் பிரேசில் ஆகிய வெளிநாட்டு ஊடகங்களின் பக்கங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஆர்ஓ கண்ணா, “ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் காந்திய தத்துவம், இந்தியாவின் ஆழமான மதிப்புகளின் மீதான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளரும், காங்கிரஸின் டேட்டா அனலிட்டிக்ஸ் தலைவருமான ப்ரவீன் சக்கரவர்த்தி, “ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டு “மிகவும் சிறியது மற்றும் கட்டமைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளதாக டைம் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
அதேபோல பாலிவுட் நடிகர் ஸ்வரா பாஸ்கர்,”ரஷ்யா, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து தான் இதுபோல எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டதாக செய்திகள் வரும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அதன் அமைப்புகளும் ஜனநாயகத்தை கொலை செய்யும் பட்டியலில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
They tried to silence a voice. Now every corner of the world hears the voice of India. pic.twitter.com/HQ71nLwxW0
— Shashi Tharoor (@ShashiTharoor) March 25, 2023