ஜீவா – அர்ஜூன் நடிக்கும் பீரியட் ஆக்ஷன் படத்தை பாடாலாசிரியர் பா. விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு கே. பாக்யராஜ் நடிப்பில் உருவான ‘ஞானப்பழம்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான பா.விஜய், முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். பின்னர் ‘ஞாபகங்கள்’ படத்தின் வாயிலாக நடிகராகவும் அறிமுகமானதுடன், ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தை இயக்கி நடித்திருந்தார். தொடர்ந்து, ‘ஆருத்ரா’ படத்தை இயக்கியிருந்த நிலையில், தற்போது ஜீவா, அர்ஜூன் நடிக்கும் புதியப் படத்தை பா. விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்தக் கூட்டணியில், கடந்த 2020-ம் ஆண்டு ‘மேதாவி’ என்ற ஹாரர் த்ரில்லர் படம் உருவாக உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. ஆனால், கொரோனா ஊரடங்கு மற்றும் இந்தப் படத்தில் நடிக்க இருத்த ரஷ்யப் பெண் உயிரிழந்தது ஆகியவற்றின் காரணமாக படம் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், பா.விஜய் இயக்கும் புதியப் படத்தில் ஜீவா – அர்ஜூன் நடிக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். பீரியட் டிராமாவாக உருவாக உள்ள இந்தப் படத்திற்காக, ஹைதராபாத் ராமேஜி ராவ் ஃபிலிம் சிட்டியில், பிரம்மாண்ட செட் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரும்பாலான பகுதிகள் இங்கு படம் பிடிக்கப்பட்டப்பின், உதகை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜீவாவுடன் ராசி கண்ணா நடிக்கவுள்ளார். புதியக் கதையில் நடிப்பதால், ‘மேதாவி’ படம் மீண்டும் உருவாகுமா; இல்லை கைவிடப்பட்டு விட்டதா என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.