புதுடெல்லி: புதிய ஓய்வூதிய திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் ஏற்கும் படியாக மேம்படுத்த நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பாஜ ஆட்சி செய்யாத ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளன. இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த குழு அமைப்பதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மக்களவையில் நிதி மசோதா 2023ஐ தாக்கல் செய்து பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘புதிய ஓய்வூதியம் தொடர்பான பிரச்னையை ஆராய நிதி செயலாளரின் கீழ் ஆய்வு குழு அமைக்கப்படும். அந்த குழு ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்தும்’’ என்றார்.