காலநிலை மாற்றங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக தனிநபர்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒரு மணி நேரம் அணைக்க ‘பூமி நேரம்’ என்ற நிகழ்வு ஊக்குவிக்கிறது.
இந்த ‘பூமி நேரம்’ நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (மார்ச் 25) ‘பூமி நேரம்’ கடைபிடிக்கப்படுகிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து மில்லியன் கணக்கான ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக வனவிலங்கு நிதியம் (WWF) சிட்னி, விளக்குகளை அணைக்கும் நிகழ்வைத் தொடங்கியபோது, புவி நேரம் என்ற கருத்து உருவானது. முதன் முதலாக மார்ச் 31, 2007 அன்று உள்ளூர் நேரப்படி இரவு 7:30 மணிக்கு சிட்னியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அங்கு மக்கள் ஒரு மணி நேரம் தங்கள் விளக்குகளை அணைக்க ஊக்குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 2008-ம் ஆண்டு, இந்த நிகழ்வு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று மார்ச் 29 அன்று கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அன்று முதல் ஆண்டுதோறும் மார்ச் கடைசி சனிக்கிழமையன்று ‘பூமி நேரம்’ கொண்டாடப்படுகிறது.
‘பூமி நேரம்’ உள்ளூர் நேரப்படி இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை ஒரு மணிநேரம் அனைத்து விளக்குகளையும் அணைக்க மக்களை ஊக்குவிக்கிறது. மேலும் இயற்கையுடன் மீண்டும் இணைவது, உணவு சமைப்பது, குடும்பம் மற்றும் அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட தூண்டுகிறது.
ஒரு மணி நேரம் விளக்குகளை அணைப்பது பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும், ஒற்றுமையுடன் செய்யப்படும் பெரிய அளவிலான இந்த செயல் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.