மஸ்கட்,
இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக். இவர் இந்தியாவில் இஸ்லாமிய மத ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் அமைதி டிவியின் தலைவராக இருந்து வந்தார்.
இதனிடையே, அமைதி டிவி மற்றும் மத பிரசாரங்கள் மூலம் பிற மதத்தினர் குறித்து வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து, ஜாகிர் நாயக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுதல், பணமோசடி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆனால், ஜாகிர் நாயக் இந்தியாவில் இருந்து மலேசியா தப்பிசென்றார். அதேவேளை, ஜாகிர் நாயக்கின் அமைதி டிவி ஒளிபரப்பும் அவரது அறக்கட்டளையும் இந்தியாவில் செயல்பட தடை செய்யப்பட்டது.
இதனால் மலேசியாவில் குடியுரிமை பெற்ற ஜாகிர் நாயக் அங்கு மத பிரசாரம் செய்து வந்தார். ஆனால், அங்கும் வெறுப்புணர்வு தூண்டும் வகையில் பேசியதால் ஜாகிர் நாயக் பிரசார உரை நிகழ்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்லாமிய மதத்தின் புனித மாதமான ரமலான் தொடங்கியது தொடர்பாக ஓமன் நாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓமன் நாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜாகிர் நாயக், இந்தியாவில் பெரும்பாம்பாலான இந்து மதத்தினர் என்னை விரும்புகின்றனர். அவர்கள் என்னை அதிகம் விரும்புவதால் வாக்கு அரசியலுக்கு அது பிரச்சினையை உருவாக்குகிறது. இந்தியாவில் நான் கூட்டங்கள், உரை நிகழ்த்தும்போது பீகார், கிஷன்கஞ்ச் பகுதியில் இருந்து 5 கோடியில் இருந்து 10 கோடி பேர் வருவார்கள். அதில் 20 சதவிகிதம் பேர் இஸ்லாமிய மதத்தை சாராதவர்கள். அவர்கள் என்னிடம் பேசும்போது எங்கள் மதத்தில் 40 மணி நேர உரைக்கு பின்னரும் எதையும் கற்றுக்கொள்ளாதபோதும் நீங்கள் பேசிய 2 மணி நேர உரையில் நிறைய கற்றுக்கொண்டோம் என்று கூறினர்’ என்றார்.