நானும் கணவரும் முதுமையில் இருக்கிறோம். எங்களின் நான்கு பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்துவிட்டோம். அனைவரும் குழந்தைகளுடன் நிம்மதியாக இருக்கிறார்கள். மூன்றாவது மகன் மட்டும் தானும் நிம்மதியில்லாமல், குடும்பத்தினரையும் நிம்மதியாக இருக்க விடாமல் வாழ்க்கையை பிரச்னையாக்கிக்கொண்டிருக்கிறான்.
மூன்றாவது மகனுக்கு நாங்கள்தான் பெண் பார்த்து திருமணம் முடித்துவைத்தோம். இருவருமே ஈகோ பிடித்தவர்கள். எனவே, திருமணமான ஒரு வருடத்திலேயே இருவருக்குள்ளும் பிரச்னை ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு சண்டை வரும்போது, அதை அவர்களுக்குள் முடித்துக்கொள்ளாது குடும்பத்தில் மற்றவர்களையும் தொந்தரவு செய்து, அவர்களுக்கும் பிரச்னை ஏற்படுத்திவிடுவார்கள். இந்நிலையில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது, இனியாவது இருவரும் சண்டையைக் குறைத்துக்கொண்டு வாழ ஆரம்பிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால், அதற்குப் பின் அவர்களுக்குள் பிரச்னை இன்னும் அதிகமாகவே செய்தது.
இந்தச் சூழலில், தனக்கும் என் மகனுக்கும் இடைப்பட்ட பிரச்னையில் ஒருமுறை என் மருமகள், காவல் நிலையத்தில் மொத்தக் குடும்பத்தின் மீதும் புகார் கொடுக்க, நான், கணவர், மற்ற பிள்ளைகள் என அனைவரும் இரண்டு நாள்கள் காவலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் என் மகனுக்கும் மருமகளுக்கும் இடையிலிருந்த சண்டை பகையாக, வெறுப்பாக மாறியது. இனி இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதால், இருவரும் விவாகரத்துப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நாங்கள் கூறினோம். ஆனால், அதற்கு இருவருமே ஒப்புக்கொள்ளவில்லை. அதே நேரம் சேர்ந்து வாழவும் இல்லை.
என் மருமகள் தன் குழந்தையுடன் தன் அம்மா வீட்டில் தங்கிக்கொள்ள, என் மகன் எங்களுடன் வாழ்ந்தான். இந்நிலையில், என் பேத்தியை பள்ளியில் சேர்த்தபோது, இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ முடிவெடுத்தார்கள். நாங்களும், காலம் எல்லாவற்றையும் சரி செய்தால் போதும் என்று நினைத்தோம். ஆனால், சில மாதங்களிலேயே மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஆரம்பமானது. ஒவ்வொரு சண்டையின்போது, என் மருமகளும் அவள் அண்ணன்களும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் பிரச்னைகள் கொடுக்க ஆரம்பித்தனர்.
அரசு வேலையில் இருக்கும் என் மூத்த மருமகள் மீது லஞ்சப் புகார், என் இரண்டாவது மகனின் மாமனார் மீது இட அபகரிப்பு புகார், என் கணவர் மீது நிலத்தகராறு வழக்கு என்று பலரையும் பணம் கொடுத்து தூண்டிவிட்டுப் பிரச்னை செய்ய வைக்கிறார்கள் என் மருமகளும், அவள் அண்ணன்களும். என் மூன்றாவது மகனுக்கும் அவன் மனைவிக்கும் இடையிலான பிரச்னையில் என் குடும்பத்தினர் எல்லோரும் இப்போது நிம்மதியிழந்து உள்ளோம்.
மீண்டும் நாங்கள் இருவரிடமும் விவாகரத்து தீர்வை கூறினோம். இப்போதும் இருவரும் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார்கள். ‘எனக்கு கணவர் வேண்டாம், ஆனால் என் குழந்தைக்கு அப்பா வேண்டும்’ என்கிறார் மருமகள். ‘அவளுடன் என்னால் வழக்கு, நீதிமன்றம் என்றெல்லாம் அலைய முடியாது. அவ்வளவு சீக்கிரம் இந்த வழக்கு முடியாது, முடியவிட மாட்டாள்’ என்று புரிந்துகொள்ளாமல் பேசுகிறான் என் மகன்.
இவர்கள் பிரச்னையை எப்படித்தான் தீர்ப்பது? எங்கள் எல்லோருடைய நிம்மதிக்கு என்ன வழி?