நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 1-ம் தேதி கூடியது. இதில், 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
பதிலுக்கு ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் அமளியில் குதித்தனர். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் நாடாளுமன்றம் முடங்கியது. இதன் காரணமாக பட்ஜெட் மீது விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் தன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அனைத்து அமைச்சகங்களின் மானியக் கொள்கைகளையும், விவாதமின்றி ஓட்டெடுப்புக்கு அனுமதித்தார். குரல் ஓட்டெடுப்பு மூலம் 2023 – 2024 நிதியாண்டில் மொத்தம் ரூ.45,03,097 கோடி செலவழிப்பதற்கான மானியக் கோரிக்கைக்கு மக்களவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விவாதம் இல்லாமல் ரூ.45,03,097 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம். “2023-24ம் ஆண்டில் பட்ஜெட் குறித்து மக்கள் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்காமலேயே, ரூ.45,03,097 கோடி திரட்டப்பட்டு, மக்களுக்காக செலவிடப்படும் என விவாதம் இல்லாமல் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இருந்து வரும் மோசமான செய்தி ஆகும்” என தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா. “பாராளுமன்ற ஜனநாயகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லை. விவாதங்களில் நம்பிக்கை இல்லாதவர். அவர் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிற ஒரே பிரதமர் நரேந்திர மோடி தான்.
முன்னாள் பிரதமர் நேரு பத்திரிகையாளர்களுடன் அடிக்கடி சந்திப்பார். எவ்வளவு கடினமான கேள்வி கேட்டாலும் பொறுமையாக பதில் அளிப்பார். அவரை கடுமையாக விமர்ச்சித்து கார்டூன் வரையப்பட்டது. அதை நேருவிடம் கூறும் போது அவர் சம்மந்தப்பட்டவரை அழைத்து எனக்கு எதிராக தொடர்ந்து கார்டூன் வரையுங்கள் என்று கூறினார்.
விமர்சனங்களை ரசிக்க வேண்டும். மோடிக்கு அந்த சகிப்பு தன்மை இல்லை. பாராளுமன்றத்தில் அதானி குறித்து தனது விமர்சனத்தை ராகுல் காந்தி எழுப்புகிறார். அதற்கு உரிய விளக்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். அந்த பேச்சுக்களை எல்லாம் அவை குறிப்பில் இருந்து நீக்குவது என்பது சர்வாதிகார நாட்டில் கூட நடக்காது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சர்வாதிகாரியாக ஆட்சி செய்ய முடியும் என்பதற்கு மோடி ஒரு உதாரணம். 45 லட்சம் கோடியை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால் தான் செலவு செய்ய முடியும். ஆனால் அந்த ஒப்புதலை எதிர்க்கட்சிகளின் ஒப்புதலே இல்லாமல் ஆளும் கட்சியினர் மட்டுமே ஒப்புதல் கொடுத்து நீங்கள் செலவு செய்தால், அது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து.
இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்தாகத்தான் முடியும். ஒவ்வொரு துறைக்கும் மானிய கோரிக்கை நடக்கும். அப்போது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை முறையாக செலவு செய்யப்பட்டிருக்கிறதா? என்பது போன்ற பல கருத்துக்களை எதிர்கட்சிகள் தான் எழுப்ப முடியும். ஆளும்கட்சினர் உண்மையை சொல்ல மாட்டார்கள்.
எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். நாணயத்தின் ஒரு பக்கம் சேதாரமானாலும் அது செல்லாது. ஆகையால் இரண்டு கட்சிகளும் சேதாரமில்லாமல் இயங்குவது தான் ஜனநாயகம். ராகுல் காந்தி வெளிநாட்டில் இந்தியாவின் புகழை சீர்குலைத்து விட்டார் என்றும் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.
அதற்கு அவர் எந்த அடிப்படையில் பேசினேன் என்று விளக்கம் கொடுக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டதற்கு, அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மன்னிப்பு கேட்டால் தான் பேசவிடுவோம் என்றால் ஜனநாயக படுகொலை” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. “நாடாளுமன்ற நடவடிக்கைளை எதிர்கட்சிகள் தான் முடக்கினார்கள். சிலர் வரவில்லை என்பதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. நாடாளுமன்றத்துக்கு சம்மந்தமே இல்லாத விஷயத்தை அங்கே விவாதிக்க கூறுவதும், வெளி நாட்டில் போய் இந்தியாவுக்கு எதிராக பேசுவதும் தவறு. அதானியை பற்றி நாடாளுமன்றத்தில் எதற்காக பேச வேண்டும்?” என்று முடித்துக்கொண்டார்.