மதுரை: மதுரை செங்கரும்புக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி எடுக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இடைத்தரகர்கள் இன்றி, செங்கரும்பை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், விளாத்திகுளம் மிளகாய், சிவகங்கை கருப்பு கவுனி அரிசி, மூலனூர் குட்டை முருங்கை, மதுரை செங்கரும்பு உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் மதிப்பீட்டில், திட்டமிடப்பட்டு இருப்பதாக தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதில் செங்கரும்பு, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் விளைந்தாலும் மதுரை மேலூர் பகுதியிலுள்ள செம்மண், வண்டல் மண் என கலவையான மண்ணில் விளையும் செங்கரும்பு மெல்லிய தோல், அதிக சாறு, அதிக இனிப்புசுவையுடையது.
இதனால் மேலூர்பகுதியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் செங்கரும்பு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, கள்ளிக்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் 800 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயரிடப்படுகிறது.
இதுகுறித்து மதுரை அரசு வேளாண் கல்லூரி உழவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் ரா.துரை சிங் கூறியதாவது: தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயிரிடப்படும் பாரம்பரிய பணப்பயிர் செங்கரும்பு. தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி, நாகப்பட்டினம், திருச்சி, கரூர், மதுரையில் செங்கரும்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கரும்பில் இரும்பு, கால்சியம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் செங்கரும்பு பயன்படுத்தப்படுகிறது.
புவிசார் குறியீடு பெறுவதன் மூலம் செங்கரும்பின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்படும். கூடுதல் விலை கிடைக்கும். செங்கரும்பு பயிரிடும் பகுதி மேலும்அதிகரிக்கும். உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மேலூர் பகுதியில் செங்கரும்பு பயிரிடும் விவசாயிகள் கூறும்போது, ‘‘கரும்புபயிரிட்டு 10 மாதம் கடுமையாக உழைத்தால்தான் நல்ல விளைச்சலைக் காண முடியும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க தைப்பொங்கலுக்கு 2மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும் இடைத்தரகர்கள் இன்றிஅரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்கும்.
புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் மேலும் பல விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட ஆர்வம் காட்டுவர். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்’’ என்றனர்.