திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு, ஹரிராம் என்ற மகன் உள்ளார். இவர், பழனியருகே நெய்க்காரபட்டியில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ஹரிராம், கை, கால் மற்றும் உடலில் காயங்களுடன் வீட்டிற்கு திரும்பினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஹரிராமை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹரிராமின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பள்ளி முடிந்து வீட்டிற்கு வருவதற்காக பேருந்தில் ஏறியபோது, இருக்கையில் அமர்வது தொடர்பாக சக மாணவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஹரிராமை சிசிடிவி இல்லாத அறைக்கு அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கி அடித்ததை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் படி, போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யமல், மாணவன் ஹரிராமிடம் தொடர்ந்து விசாரணை செய்து பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசுவதும், சமரசம் செய்வதுமாக இருந்துள்ளனர்.
இதை கவனித்த ஹரிராம் தந்தை மகனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.